தென்காசி அருகே காட்டு யானைகள் அட்டகாசம்
தென்காசி அருகே விளை நிலங்களில் காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன.
தென்காசி,
தென்காசி அருகே விளை நிலங்களில் காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன.
காட்டு யானைகள் அட்டகாசம்
நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள வடகரையில் காட்டு யானைகள் அடிக்கடி விளை நிலங்களுக்குள் புகுந்து நெல், வாழை, தென்னை போன்றவற்றை சேதப்படுத்துவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வடகரை சென்னாபொத்தை பகுதியில் தென்னந்தோப்பிற்குள் காட்டு யானைகள் புகுந்தது. அங்கு இருந்த சுமார் 50 தென்னை மரங்களை வேருடன் பிடுங்கி வீசி நாசம் செய்துள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வடகரை பகுதியில் யானைகள் அட்டகாசம் செய்வது குறித்து ஆய்வு செய்தார். அப்போது அகழிகள் தோண்டுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி அடவிநயினார் அணை பகுதியில் அகழிகள் தோண்டும் பணி தொடங்கி உள்ளது.
தீவிர நடவடிக்கை
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், யானைகளை காட்டுக்குள் விரட்டி விட்டு அகழிகள் தோண்ட வேண்டும். இல்லையென்றால் யானைகள் காட்டுக்குள் செல்லாமல் இங்கேயே இருந்து விடும். மேலும் யானைகளை விரட்டுவதற்கு வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.