வள்ளியூர் பகுதியில் கைவரிசை காட்டிய திருச்சியை சேர்ந்த 3 பேர் கைது 11 பவுன் நகைகள்- ரூ.1 லட்சம் பறிமுதல்
வள்ளியூர் பகுதியில் பலரிடம் கைவரிசை காட்டிய திருச்சியை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;
வள்ளியூர்,
வள்ளியூர் பகுதியில் பலரிடம் கைவரிசை காட்டிய திருச்சியை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 11 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப்பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீசார் ரோந்து
வள்ளியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள், சப்-இன்ஸ்பெக்டர் செல்வன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக நடந்து வந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், திருச்சி ராம்ஜிநகரை சேர்ந்த வேலு மகன் ஆறுமுகம் (வயது 37), மோகன் மகன் கார்த்திக் என்ற பாண்டியன் (20), அன்பழகன் மகன் மனோஜ்குமார் (31) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், வள்ளியூர் பகுதியில் வங்கி மற்றும் நகைக்கடைக்கு சென்று வந்த பலரின் கவனத்தை திசை திருப்பி நகை- பணத்தை திருடிச் செல்வது போன்ற பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
3 பேர் கைது
பின்னர் இதுதொடர்பாக வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 11 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரையும் போலீசார் வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.