முத்தையாபுரத்தில் போலீஸ் நிலையம் அருகே ஒருவர் அடித்துக் கொலை தொழிலாளி கைது

முத்தையாபுரத்தில் போலீஸ் நிலையம் அருகே ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-11-07 21:30 GMT
ஸ்பிக்நகர், 

முத்தையாபுரத்தில் போலீஸ் நிலையம் அருகே ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

தொழிலாளி

தூத்துக்குடி அருகே உள்ள புல்லாவெளி பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி. இவருடைய மகன் சரவணன் (வயது 31). இவர் முத்தையாபுரம் பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இரவில் அந்த பகுதியில் உள்ள கடைகளின் முன்பு படுத்து தூங்குவது வழக்கம்.

கடந்த சில நாட்களாக இரவில் அவர் தூங்கி கொண்டு இருக்கும் போது யாரோ ஒருவர் அவரை தட்டி எழுப்பி விட்டு ஓடிவிடுவாராம். சரவணன் எழுந்து பார்க்கும் போது அருகில் யாரும் இருப்பது இல்லை. இதனால் ஆத்திரம் அடைந்த சரவணன், தன்னை எழுப்புகிறவரை பிடிக்க தக்க தருணம் பார்த்து காத்து இருந்தார்.

அடித்துக் கொலை

இந்த நிலையில் நேற்று காலையில் முத்தையாபுரம் போலீஸ் நிலையம் அருகே உள்ள பழைய ஏ.டி.எம். வாசலில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் படுத்து தூங்கி கொண்டு இருந்தார். அங்கு வந்த சரவணன், இரவில் தன்னை எழுப்பி விட்டு ஓடுபவர், இவராகத்தான் இருக்கும் என்று சந்தேகம் அடைந்து உள்ளார். இதனால் அருகில் கிடந்த உருட்டு கட்டையை எடுத்து தூங்கி கொண்டு இருந்தவரை தாக்கி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

இதில் படுத்து இருந்தவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

கைது

இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சரவணனை கைது செய்தார். தொடர்ந்து இறந்தவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்