மேம்பாலத்தின் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதல்: திருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை பலி
மேம்பாலத்தின் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் திருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை பலியானார்.
கயத்தாறு,
மேம்பாலத்தின் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் திருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை பலியானார்.
புதுமாப்பிள்ளை
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள பருத்திகுளம் மேல தெருவைச் சேர்ந்தவர் பூல்பாண்டி. இவருடைய மகன் சின்னராஜா (வயது 28). இவர் கயத்தாறில் உள்ள பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கும், நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்த சுப்புலட்சுமிக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
பின்னர் கணவன்-மனைவி 2 பேரும் பருத்திகுளத்தில் வசித்தனர். நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கயத்தாறு அருகே சவலாபேரியில் உள்ள உறவினரின் வீட்டுக்கு சின்னராஜா தனது மோட்டார் சைக்கிளில் தனியாக புறப்பட்டு சென்றார். பின்னர் மாலையில் அவர் அங்கிருந்து தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது மிதமான மழை பெய்து கொண்டிருந்தது.
பலி
கயத்தாறு யூனியன் அலுவலகம் பின்புறம் நாற்கர சாலை மேம்பாலத்தில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி மேம்பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சின்னராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
விபத்தில் இறந்த சின்னராஜாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 2 மாதத்தில் விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.