களக்காடு அருகே பயங்கரம் தையல்காரர் தலை துண்டித்துக் கொலை அண்ணன்-தம்பிக்கு வலைவீச்சு

களக்காடு அருகே தையல்காரர் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அண்ணன்- தம்பியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-11-07 22:00 GMT
களக்காடு, 

களக்காடு அருகே தையல்காரர் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அண்ணன்- தம்பியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தலை துண்டித்து பிணமாக கிடந்தார்

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மேலகாடுவெட்டியில் பச்சையாறு கரையில் நேற்று காலை 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு பிணமாக கிடந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் களக்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அங்கு உடல் தனியாகவும், சற்று தூரத்தில் தலை தனியாகவும் ரத்த வெள்ளத்தில் கிடந்தது. பின்னர் பிணத்தை போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். மேலும் நெல்லையில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது. அது சம்பவம் நடந்த இடத்தில் மோப்பம் பிடித்து விட்டு, தெற்கு காடுவெட்டி வரை ஓடிச் சென்றது. ஆனால் வழியில் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

தையல்காரர்

பின்னர் இதுதொடர்பாக களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டு கிடந்தவர் அதே ஊரைச் சேர்ந்த சாலமன் மகன் ஆல்பர்ட் செல்வகுமார் (வயது 40) என்பதும், வள்ளியூரில் உள்ள தையல் கடையில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

நேற்று முன்தினம் மாலை அதே ஊரைச் சேர்ந்த மாயக்கண்ணன் என்பவரிடம், மணி மகன்கள் பொன் இசக்கி, அவருடைய தம்பி இசக்கிமுத்து ஆகிய இருவரும் குடிபோதையில் தகராறு செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த ஆல்பர்ட் செல்வகுமார் தட்டிக் கேட்டு தகராறை விலக்கி விட்டுள்ளார். பின்னர் இரவில் ஆல்பர்ட் செல்வகுமாரை, அண்ணன்-தம்பி இருவரும் மோட்டார்சைக்கிளில் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் வெகு நேரமாகியும் ஆல்பர்ட் செல்வகுமார் வீடு திரும்பி வரவில்லை.

அண்ணன்-தம்பிக்கு வலைவீச்சு

இந்த நிலையில் நேற்று காலை பச்சையாறு கரையில் ஆல்பர்ட் செல்வகுமார் தலை துண்டிக்கப்பட்டு பிணமாக கிடந்தார். எனவே இச்சம்பவத்தில் அண்ணன், தம்பி இருவரும் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவத்தை தொடர்ந்து அண்ணன், தம்பி இருவரும் தலைமறைவாக உள்ளனர். இதுதொடர்பாக பொன் இசக்கியின் தந்தை மணியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொன் இசக்கி, இசக்கிமுத்து ஆகிய இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட ஆல்பர்ட் செல்வகுமாருக்கு சாந்தி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். தையல்காரர் தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்