விளாத்திகுளம் அருகே கண்மாயில் மூழ்கி தந்தை-மகன் பலி குளித்தபோது பரிதாபம்
விளாத்திகுளம் அருகே கண்மாயில் குளித்த தந்தை, மகன் தண்ணீரில் மூழ்கி உயிர் இழந்தனர்.
விளாத்திகுளம்,
விளாத்திகுளம் அருகே கண்மாயில் குளித்த தந்தை, மகன் தண்ணீரில் மூழ்கி உயிர் இழந்தனர்.
ஆடு மேய்க்கும் தொழிலாளி
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கூத்தலூரணியை சேர்ந்தவர் பொய்யாழி (வயது 44). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவருடைய மனைவி குருமாரி. இவர்களுக்கு மருது (18) என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். பொய்யாழி குடும்பத்துடன் மனைவி ஊரான விளாத்திகுளம் அருகே உள்ள அயன்செங்கல்படை கிராமத்தில் வசித்து வந்தார்.
மருது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, ஆந்திராவில் இனிப்பு பலகாரம் கடையில் வேலைபார்த்து வந்தார். இவர் தீபாவளியை முன்னிட்டு கடந்த 3 நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்து இருந்தார்.
2 பேர் பலி
இந்த நிலையில் தந்தை, மகன் 2 பேரும் நேற்று காலை 10 மணிக்கு ஊருக்கு அருகே உள்ள கண்மாயில் குளிக்க சென்றனர். வெகுநேரம் ஆகியும் குளிக்க சென்ற 2 பேரும் வீட்டுக்கு வரவில்லை என்பதால் உறவினர்கள் கண்மாய்க்கு சென்று பார்த்தனர். அப்போது அவர்கள் கொண்டு சென்ற துணிகள் மட்டும் கரையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக விளாத்திகுளம் தீயணைப்பு படையினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கண்மாயில் சோதனை செய்தனர். அப்போது இறந்த நிலையில் தந்தை, மகனின் உடல்கள் மீட்கப்பட்டன. இதனை கண்டு உறவினர்கள் கதறி அழுதனர்.
நீச்சல் தெரியாததால்...
சம்பவ இடத்துக்கு விளாத்திகுளம் போலீசார் விரைந்து சென்று இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் தந்தை, மகன் 2 பேருக்கும் நீச்சல் தெரியாது என்பதும், அவர்கள் கண்மாயில் ஆழமான பகுதியில் தண்ணீரில் மூழ்கி இறந்து இருப்பதும் தெரியவந்தது.
இகு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.