ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ; 4 பேர் காயம் புகை மூட்டத்தால் ரெயில் சேவை பாதிப்பு
அம்பர்நாத்தில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் காயம் அடைந்தனர். தண்டவாளத்தை புகை மண்டலம் சூழ்ந்ததால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
அம்பர்நாத்,
தானே மாவட்டம் அம்பர்நாத் கிழக்கு மோரிவிலி எம்.ஐ.டி.சி. பகுதியில் ஒரு ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. நேற்று பிற்பகல் 3 மணி அளவில் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ கொழுந்து விட்டு எரிந்தது. அங்கிருந்து கரும்புகை குபுகுபுவென வெளியேறியது.
இதனால் அந்த பகுதியே புகை மண்டலமாக மாறியது. குடியிருப்புகளை சூழ்ந்த புகையால் குடியிருப்புவாசிகள் கண்எரிச்சல், மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் அம்பர்நாத், உல்லாஸ்நகர், பத்லாப்பூர் ஆகிய இடங்களில் இருந்து 10 தீயணைப்பு வாகனங்களில் அங்கு விரைந்து வந்தனர்.
கொதிகலன் வெடித்தது
இந்தநிலையில், தொழிற்சாலையில் ரசாயன கொதிகலன் வெடித்து தீ மேலும் பரவியது. தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க போராடினார்கள். ஆனால் உடனடியாக அவர்களால் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. வெப்ப தாக்கம் காரணமாக தீயணைப்பு படையினர் தொலைவில் நின்றபடியே தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மாலை 5 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
ரெயில் சேவை பாதிப்பு
இதற்கிடையே அருகில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் கரும்புகை சூழ்ந்ததன் காரணமாக அம்பர்நாத்-பத்லாப்பூர் இடையே ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. அந்த வழியாக வந்த மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் அவதி அடைந்தனர். பலர் தண்டவாளத்தில் இறங்கி நடையை கட்டினர்.
இந்த தீ விபத்தில் ரசாயன தொழிற்சாலை முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த விபத்தில் 4 பேர் காயம் அடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.