ஆதரவற்ற குழந்தைகள் பெயரில் தீபாவளி பண வசூல் 6 பேர் கைது
சாந்தாகுருசில் ஆதரவற்ற குழந்தைகள் பெயரில் தீபாவளிபணவசூலில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மும்பை சாந்தாகுருஸ் பகுதியில் ஆதரவற்ற குழந்தைகளின் தீபாவளி கொண்டாட்டத்திற்காக உதவி செய்யும்படி 6 பேர் கொண்ட கும்பல் பொதுமக்களிடம் கட்டாய பண வசூலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதுபற்றி நிர்மல் நகர் போலீசாருக்கு புகார் வந்தது. அதன்பேரில் போலீசார் அந்த கும்பலை பிடிக்க தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்தநிலையில் பணம் வசூலிக்க வந்த அந்த கும்பலை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர்களது பெயர் ஜோராவர் லக்கன்பால் (வயது23), குருதயால் (27), சன்னிபத்ரா (23), ஹப்பிசிங் திக்பால்(31), கபில் ராத்தோடு(33), சுக்வீந்தர் பட்வா(29) என்பது தெரியவந்தது.
6 பேர் கைது
விசாரணையில், அவர்கள் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தையோ அல்லது தொண்டு அமைப்புகளையோ சார்ந்தவர்கள் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. ஆதரவற்ற குழந்தைகள் பெயரில் பணம் சம்பாதிப்பதற்காக பொதுமக்களிடம் பணவசூலில் ஈடுபட்டு வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து 6 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டனர்.