கர்நாடகத்தில் இன்று இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை 5 தொகுதிகளில் வெற்றி யாருக்கு?
கர்நாடகத்தில் இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் 5 தொகுதிகளில் வெற்றி யாருக்கு கிடைக்கும் என்பது பகல் 1 மணிக்குள் தெரிந்து விடும்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் எம்.பி.க்களாக இருந்த எடியூரப்பா(சிவமொக்கா), ஸ்ரீராமுலு(பல்லாரி), புட்டராஜூ(மண்டியா) ஆகியோர் கடந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றனர். இதையடுத்து அவர்கள் 3 பேரும் தங்களின் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் கர்நாடகம் சார்பில் நாடாளுமன்றத்தில் சிவமொக்கா, பல்லாரி, மண்டியா ஆகிய 3 தொகுதிகள் காலியாக இருக்கின்றன.
அதுபோல் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் முதல்-மந்திரி குமாரசாமி ராமநகர், சென்னப்பட்டணா ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து ராமநகர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார். மேலும் ஜமகண்டி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்வான சித்து நியாமகவுடா, சாலை விபத்தில் மரணம் அடைந்தார். இதனால் கர்நாடக சட்டசபையில் ராமநகர் மற்றும் ஜமகண்டி ஆகிய 2 தொகுதிகள் காலியாக இருக்கின்றன.
காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் காலியாக உள்ள மண்டியா, பல்லாரி, சிவமொக்கா ஆகிய 3 தொகுதிகளுக்கும், சட்டமன்றத்தில் காலியாக இருக்கும் ராமநகர், ஜமகண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கும் நவம்பர் 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. பல்லாரி, ஜமகண்டி ஆகிய தொகுதிகளில் காங்கிரசும், மண்டியா, ராமநகர், சிவமொக்கா ஆகிய 3 தொகுதிகளில் ஜனதா தளம்(எஸ்) கட்சியும் போட்டியிட்டுள்ளன.
மண்டியாவில் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் சிவராமேகவுடா, பா.ஜனதா சார்பில் டாக்டர் சித்தராமையா, சிவமொக்கா தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் மது பங்காரப்பா, பா.ஜனதா சார்பில் எடியூரப்பா மகன் ராகவேந்திரா, பல்லாரியில் காங்கிரஸ் வேட்பாளராக உக்ரப்பா, பா.ஜனதா வேட்பாளராக சாந்தா, ஜமகண்டியில் காங்கிரஸ் வேட்பாளராக ஆனந்த் நியாமகவுடா, பா.ஜனதா வேட்பாளராக ஸ்ரீகாந்த் குல்கர்னி ஆகியோரும், ராமநகரில் ஜனதா தளம்(எஸ்) வேட்பாளராக அனிதா குமாரசாமி, பா.ஜனதா சார்பில் சந்திரசேகர் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்
இதில் ராமநகர் பா.ஜனதா வேட்பாளர் சந்திரசேகர் தேர்தலுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பு திடீரென போட்டியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். கடந்த 3-ந்தேதி நடந்த இடைத்தேர்தலில் அதிகபட்சமாக ஜமகண்டியில் 81.58 சதவீதமும், குறைந்தபட்சமாக மண்டியாவில் 53.93 சதவீதமும் ஓட்டுகள் பதிவாயின. ஓட்டுகள் பதிவாகியுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு உள்ளன.
அதாவது மண்டியா தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள், மண்டியாவில் உள்ள அரசு நிகர்நிலை கல்லூரியிலும், சிவமொக்கா தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் சிவமொக்காவில் உள்ள சாஸ்திரி கலை கல்லூரியிலும், பல்லாரி தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் பல்லாரியில் உள்ள ராவ்பகதூர் மகாபலீஸ்வரப்பா என்ஜினீயரிங் கல்லூரியிலும், ராமநகர் தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் ராமநகரில் உள்ள அரசு முதல் நிலை கல்லூரியிலும், ஜமகண்டி தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் ஜமகண்டியில் உள்ள மினிவிதானசவுதா கட்டிடத்திலும் வைக்கப்பட்டுள்ளன.
ஓட்டு எண்ணிக்கை
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ‘ஷிப்ட்‘ அடிப்படையில் போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இந்த இடைத்தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறும் என்பது குறித்து வாக்காளர்கள் ஆர்வமாக விவாதித்து வருகிறார்கள். இந்தநிலையில் இடைத்தேர்தலில் 5 தொகுதிகளில் எந்த கட்சி வெற்றி பெறும் என்று சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிலர் நகைகள், பொருட்கள், ஆடு, மாடுகளை வைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்த தேர்தல் முடிவு பகல் 1 மணிக்குள் தெரிந்துவிடும் என்றும், அதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீபாவளி பரிசாக அமையும்
இந்த ஓட்டு எண்ணும் பணிகளில் 1,248 பேர் ஈடுபடுத்தப்படுகிறார்கள். வெற்றி பெறும் கட்சிகளுக்கு இந்த இடைத்தேர்தல் முடிவு தீபாவளி பரிசாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. இடைத்தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற்றாலும், கர்நாடக கூட்டணி ஆட்சிக்கோ அல்லது மத்தியில் ஆளும் பா.ஜனதா ஆட்சிக்கோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.