டெங்கு, பன்றிக்காய்ச்சலுக்கு பிளஸ்-2 மாணவி உள்பட 6 பேர் பலி- மர்ம காய்ச்சலால் 5 பேர் உயிரிழப்பு
டெங்கு, பன்றிக்காய்ச்சலுக்கு பிளஸ்-2 மாணவி உள்பட 6 பேர் பலியாகினர். இதேபோல மர்ம காய்ச்சலால் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோவை,
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வேலு. இவரது மகள் பூஜா (வயது 16), ராணிப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதனை செய்தபோது டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. உடனடியாக மாணவியை அவரது பெற்றோர் சென்னையில் உள்ள அரசினர் மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி பூஜா நேற்று இறந்து விட்டார்.
திருப்பூர் மாவட்டம் கன்னிவாடியை சேர்ந்த பன்னீர்செல்வம் மனைவி கவிதா (24). இவருக்கு கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல் இருந்தது. கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க் கப்பட்ட அவரின் ரத்த மாதிரியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை சிறப்பு வார்டில் வைத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதும், சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர் பிரேம்குமார் (45). இவர் கடுமையான காய்ச்சல் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதை அறிந்த டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
கடலூர் முதுநகர் பனங்காட்டு காலனி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் விமல்ராஜ் (33). இவர் கடந்த ஒருவாரமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் விமல்ராஜூக்கு திடீரென காய்ச்சல் அதிகமானதையடுத்து அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்ததோடு, அவரது ரத்த மாதிரியையும் பரிசோதனை செய்தனர். அப்போது அவருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் மதியம் இறந்தார்.
திருப்பூர் புஷ்பாநகரை சேர்ந்தவர் வளர்மதி (45). இவர் கடந்த 15 நாட்களுக்கு மேலாக கடுமையான காய்ச்சலால் அவதியடைந்து வந்தார். இதற்காக அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரின் ரத்த மாதிரியை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பதை அறிந்தனர். இதைத்தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த சந்திரசிகாமணி மனைவி எப்சிபாய் (54). இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. இதற்கு பல்வேறு தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவருக்கு காய்ச்சல் குணமாகவில்லை. நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்தபோது, திடீரென எப்சிபாய் இறந்தார். அவர் பன்றி காய்ச்சலால் இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதேபோல மர்ம காய்ச்சலுக்கு நேற்று 5 பேர் பலியாகியுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகில் உள்ள நார்த்தாம்பூண்டி பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் சுரேஷ் (30). இவர் அந்த பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வந்தார். சுரேஷ் கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம காய்ச்சலால் உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதற்காக அவர் அங்கு உள்ள ஆரம்ப சுகாதார நிலைத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் காய்ச்சல் குணமாகாததால் அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு உடல்நிலை மோசமானதையடுத்து சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்து விட்டார்.
நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை காமராஜர் தெருவை சேர்ந்த ராஜா மனைவி அமலி பிச்சுமணி (55). இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. இதற்காக அவர் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு டெங்கு அல்லது பன்றிக்காய்ச்சல் இருக்கிறதா? என்று ரத்த மாதிரி சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கிடையே, மேல்சிகிச்சைக்காக அமலி பிச்சுமணி பாளையங்கோட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அதிகாலை அமலி பிச்சுமணி பரிதாபமாக இறந்தார்.
நெல்லை அருகே உள்ள நரசிங்கநல்லூரை சேர்ந்தவர் தங்கபாண்டி (40), தொழிலாளியான இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. இதற்காக அவர் கசாயம் குடித்து, கைவைத்தியமும் செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு தங்கபாண்டி வீட்டில் திடீரென்று மயங்கி விழுந்தார். இதைக்கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே தங்கபாண்டி பரிதாபமாக இறந்தார்.
அவினாசியை அடுத்த போத்தம்பாளையத்தை சேர்ந்தவர் தெய்வசிகாமணி (45). இவர் மர்ம காய்ச்சல் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரை சிறப்பு வார்டில் வைத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
தென்காசி குளத்தூரான் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் (35). இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சந்திரசேகர் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். அவர் மர்ம காய்ச்சலால் இறந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.