மதுராந்தகம் அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி 2 வாலிபர்கள் பலி

மதுராந்தகம் அருகே தடுப்பு சுவரை தாண்டி வந்து மோட்டார்சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தீபாவளிக்கு சொந்த ஊருக்கு சென்ற 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2018-11-05 22:00 GMT
மதுராந்தகம்,

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த வி.புத்தூரைச் சேர்ந்தவர் ரங்கநாதன். இவருடைய மகன் சந்தோஷ்குமார்(வயது 25). அதே ஊரைச்சேர்ந்த முருகன் என்பவருடைய மகன் அஜித்குமார்(23).

உறவினர்களான இவர்கள் இருவரும், சென்னையை அடுத்த ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக இருவரும் நேற்று முன்தினம் இரவு ஒரே மோட்டார்சைக்கிளில் தங்கள் சொந்த ஊருக்கு சென்றனர்.

கார் மோதி இருவரும் பலி

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அடுத்த அத்திமானம் என்ற இடத்தில் இவர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிரே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்த கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரை தாண்டி வந்து, இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இருவரும் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த சந்தோஷ்குமார், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அஜித்குமார், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

போக்குவரத்து பாதிப்பு

விபத்து குறித்து தகவல் அறிந்துவந்த மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் உள்ளிட்ட போலீசார் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்குஅனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்