உத்திரமேரூர் அருகே உடலில் காயங்களுடன் வாலிபர் பிணம் கொலையா? போலீஸ் விசாரணை
உத்திரமேரூர் அருகே உடலில் காயங்களுடன் வாலிபர் பிணமாக கிடந்தார். அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உத்திரமேரூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த வெங்காரம் காட்டுப்பகுதியில் உள்ள தேனி அம்மன் கோவில் வளாகத்தில் வாலிபர் ஒருவர் உடலில் காயங்களுடன் பிணமாக கிடப்பதாக உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரித்தனர்.
அதில் பிணமாக கிடந்தவர், திருவண்ணாமலை மாவட்டம், அரசாணிபாளையத்தை சேர்ந்த வேதகிரி என்பவருடைய மகன் தேவன்(வயது 25) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அடித்துக்கொலையா?
தேவன், உடலில் காயங்களுடன் பிணமாக கிடந்ததால் அவரை யாராவது அடித்துக்கொலை செய்து இருக்கலாம்? என போலீசார் சந்தேகிக்கிறார்கள். மேலும் அவர் பிணமாக கிடந்த இடத்தின் அருகே நின்று கொண்டிருந்த அவரது மோட்டார்சைக்கிளை போலீசார் கைப்பற்றினர்.
மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவனின் நண்பர்கள் 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.