திருவான்மியூரில் ஆட்டோ டிரைவர் தீக்குளித்து தற்கொலை குடிப்பதை மனைவி கண்டித்ததால் விபரீத முடிவு
திருவான்மியூரில் ஆட்டோ டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
அடையாறு,
திருவான்மியூரில் ஆட்டோ டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். குடிப்பதை மனைவி கண்டித்ததால் அவர் இந்த விபரீத முடிவை எடுத்தார்.
சென்னை திருவான்மியூர் ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 40), ஆட்டோ டிரைவர். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். குடிப்பழக்கத்துக்கு அடிமையான அவர் தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். அவர் தினமும் குடித்து விட்டு வருவதை அவரது மனைவி கண்டித்து வந்தார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு நந்தகுமார் குடித்து விட்டு போதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது கணவன்–மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது குடிபோதையில் இருந்த நந்தகுமார் மனைவி புவனேஸ்வரியை அடித்ததாக கூறப்படுகிறது.
பின்னர் நந்தகுமார் வீட்டிற்குள் சென்றார். சிறிது நேரத்தில் அங்கு இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் அவரது உடலில் தீப்பிடித்து எரிந்தது. இதனால், வலி தாங்க முடியாமல் அவர் அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து தீயை அணைத்து நந்தகுமாரை மீட்டனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் திருவான்மியூர் போலீசார் விரைந்து வந்து தீக்காயமடைந்த நந்தகுமாரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நந்தகுமார் நேற்று அதிகாலை சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.