பருவமழை காலத்தில் பல்நோக்கு ஊழியர்களின் பணி முக்கியமானது கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்

பருவமழை காலத்தில் பல்நோக்கு ஊழியர்களின் பணி முக்கியமானது என்று கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தினார்.;

Update:2018-11-05 04:34 IST
புதுச்சேரி,

புதுவை கவர்னர் கிரண்பெடி நீர்நிலை பராமரிப்பு, வாய்க்கால்கள் தூர்வாருதல் போன்ற பணிகளில் அதிக அக்கறை காட்டி வருகிறார். வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பாக நகரப்பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்களை பல்நோக்கு ஊழியர்களை கொண்டு தூர்வார வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவு செயல்படுத்தப்படுகிறதா? என்பது தொடர்பாக நேற்று முன்தினம் நகரப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். ஆனால் பல்நோக்கு ஊழியர்கள் யாரும் பணியில் இல்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த கவர்னர் கிரண்பெடி, ஊழியர்கள் இல்லாதது குறித்து அதிகாரிகளிடம் விசாரித்தார். அதற்கு அதிகாரிகள், பல்நோக்கு ஊழியர்கள் பல்வேறு அரசியல்வாதிகளிடம் பணியில் இருப்பதாக தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி, மழைக்காலம் முடியும் வரை அரசியல்வாதிகளிடம் பணியில் உள்ள ஊழியர்களை உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவிடுமாறு கூறினார். அந்த ஊழியர்களை நேற்று கவர்னர் மாளிகைக்கு வருமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர்.

அதன்படி சுமார் 200 பல்நோக்கு ஊழியர்கள் நேற்று கவர்னர் மாளிகைக்கு வந்திருந்தனர். அவர்கள் மத்தியில் கவர்னர் கிரண்பெடி பேசியதாவது:-

பல்நோக்கு ஊழியர்களின் பணி முக்கியமானது. அவர்கள் தங்கள் பணியை ஆர்வத்துடன் செய்தால்தான் மழை வெள்ளத்தின்போது மக்கள் பாதிக்கப்படாமல் காப்பாற்றப்பட முடியும். எனவே உங்கள் பணி என்ன என்பதை உணர்ந்து அதை ஆர்வத்துடன் செய்யுங்கள். இவ்வாறு கவர்னர் கிரண்பெடி பேசினார்.

தொடர்ந்து ஊழியர்கள், புதுச்சேரி என்னுடையது, அதை சுத்தமாக வைத்திருப்பேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயலாளர் தேவேஷ்சிங், தலைமை பொறியாளர் சண்முகசுந்தரம் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

நேற்று மாலை புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சி ஊழியர்களுடன் கவர்னர் கிரண்பெடி கலந்துரையாடினார்.

மேலும் செய்திகள்