கள்ளக்காதலியை மிரட்டி ரூ.8 லட்சம் பறித்த வாலிபர் கைது

ஆபாசமாக இருக்கும் வீடியோவை வெளியிடுவதாக கூறி கள்ளக்காதலியை மிரட்டி ரூ.8 லட்சம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-11-04 22:12 GMT
பெங்களூரு,

பெங்களூருவில், ஆபாசமாக இருக்கும் வீடியோவை வெளியிடுவதாக கூறி கள்ளக்காதலியை மிரட்டி ரூ.8 லட்சம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். இதற்கு உடந்தையாக இருந்ததாக வாலிபரின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு சிவாஜிநகர் அருகே ஒரு பெண் தனது கணவருடன் வசித்து வருகிறார். அந்த பெண்ணின் கணவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, தனது கணவருக்கு உரிய சிகிச்சை அளிக்க சிவாஜிநகரை சேர்ந்த இம்ரான் கான் (வயது 35) என்பவரிடம் அந்த பெண் உதவி கேட்டார். உடனே அவரும், பெண்ணுக்கு உதவி செய்தார். அப்போது இம்ரான் கானுக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது.

மேலும் அவர்கள் 2 பேரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், கள்ளக்காதலியான அந்த பெண் ஆபாசமாக இருக்கும் வீடியோவை வெளியிடுவதாக கூறி மிரட்டி இம்ரான் கான் பணம் பறித்ததாக தெரிகிறது. இதுகுறித்து சிவாஜிநகர் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணை மிரட்டி பணம் பறித்ததாக இம்ரான் கான், அவரது மனைவி சீமாவை கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில், அந்த பெண்ணுடன் இம்ரான் கானுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்ட பின்பு சீமாவை அவர் திருமணம் செய்துள்ளார். சீமா மனித உரிமை அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார். தனது மனைவி சீமாவிடம் பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருந்தது பற்றி இம்ரான் கான் தெரிவித்துள்ளார். மேலும் அந்த பெண்ணின் ஆபாச வீடியோ இருப்பது குறித்தும் அவர் கூறியுள்ளார். அதன்பிறகு, இம்ரான் கான், சீமா ஆகியோர் சேர்ந்து அந்த பெண் ஆபாசமாக இருக்கும் வீடியோவை வெளியிடுவதாக கூறி மிரட்டி ரூ.8 லட்சத்தை பறித்துள்ளனர்.

அத்துடன் மேலும் பணம் கொடுக்கும்படி அந்த பெண்ணை 2 பேரும் மிரட்டி தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதனால் அந்த பெண் போலீசில் புகார் கொடுத்தது தெரியவந்துள்ளது. கைதான தம்பதியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்