இடைத்தேர்தலில் 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றிபெறும் அமைச்சர் தங்கமணி பேட்டி

இடைத்தேர்தலில் 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என அமைச்சர் தங்கமணி கூறினார்.

Update: 2018-11-04 23:00 GMT
நாமக்கல்,

நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் மின்விளக்கு வசதி செய்யப்பட்டு உள்ளது. இப்பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். பி.ஆர்.சுந்தரம் எம்.பி., கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ., போலீஸ் சூப்பிரண்டு அருளரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு, மின் விளக்கிற்கான பொத்தானை அழுத்தி, கல்வெட்டை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உதய் மின் திட்டத்தில் கையெழுத்திடும்போதே, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா விவசாய மின் இணைப்புக்கு மீட்டர் வைப்பதாக இருந்தால் கையெழுத்திட மாட்டோம் என தெரிவித்தார். இதன் மூலம் இந்தியா முழுவதுமே விவசாய மின் இணைப்புகளுக்கு மீட்டர் வைக்காத நிலையை உருவாக்கியவர் ஜெயலலிதா. இதனால் தமிழகத்தில் எந்த காலத்திலும் விவசாய மின் இணைப்புக்கு மீட்டர் பொருத்தப்பட மாட்டாது.

இடைத்தேர்தலில் 8 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என முதல்-அமைச்சர் கூறியதாக ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் தவறானது. இடைத்தேர்தலில் 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) கமலநாதன், நகராட்சி முன்னாள் துணை தலைவர் சேகர், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கோபிநாத், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் விஜய்பாபு மற்றும் நகராட்சி பணியாளர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல் மோகனூரில் உள்ள வாங்கல் பிரிவு ரோடு அருகே நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 லட்சம் செலவில் உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கான கல்வெட்டையும் அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.

இதில் மோகனூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கருமண்ணன், நகர செயலாளர் தங்கமுத்து, மாவட்ட மாணவர் அணி செயலாளர் சந்திரமோகன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்