மோட்டார்சைக்கிளில் இருந்து சாலையில் தவறிவிழுந்த பெண் மீது லாரி ஏறி கால் துண்டானது மீன்வாங்க வந்தபோது பரிதாபம்
வேலூர் மீன்மார்க்கெட்டுக்கு மீன்வாங்க வந்தபோது மோட்டார்சைக்கிளில் இருந்து தவறிவிழுந்த பெண்மீது லாரி ஏறி இறங்கியதில் கால் துண்டானது.
வேலூர்,
கணவன் கண்முன் நடந்த இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ராணிப்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேரன். இவரது மனைவி பூங்காவனம் (வயது 40). இவர்கள் ராணிப்பேட்டையில் மீன்வியாபாரம் செய்து வந்தனர். வழக்கம்போல வியாபாரத்திற்காக மீன்வாங்குவதற்கு நேற்று காலை வேலூர் புதிய மீன் மார்க்கெட்டுக்கு மோட்டார்சைக்கிளில் வந்தனர்.
மார்க்கெட் அருகே வந்தபோது பின்னால் அமர்ந்திருந்த பூங்காவனம் மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி கீழேவிழுந்தார். அப்போது பின்னால் வந்துகொண்டிருந்த லாரி பூங்காவனத்தின் கால்மீது ஏறி இறங்கியது. இதில் பூங்காவனத்தின் இடதுகால் துண்டானது.
இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் ஓடிச்சென்று பூங்காவனத்தை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.