சினிமா படப்பிடிப்புக்காக கழிமுகத்தில் அமைக்கப்பட்ட புத்தர்சிலை சுற்றுலா தலமாக மாறிய கிராமம்

அதிராம்பட்டினம் அருகே கீழத்தோட்டம் எனும் கிராமத்தில் உள்ள கழிமுகத்தில் சினிமா படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்ட புத்தர் சிலையை காண, பல்வேறு இடங்களில் இருந்தும் மக்கள் வருவதால், அப்பகுதி சுற்றுலா தலமாக மாறி உள்ளது.

Update: 2018-11-04 22:30 GMT
அதிராம்பட்டினம்,

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ளது கீழத்தோட்டம் கிராமம். ராஜாமடம் ஊராட்சிக்கு உட்பட்டது இந்த கிராமம். மாளியக்காடு, மகிழங்கோட்டை வழியாக வரும் காட்டாறு கடலுடன் இணையும் கழிமுகம் இந்த கிராமத்தில் அமைந்து உள்ளது. கழிமுகத்தில் அலையாத்தி மரங்கள் அடர்ந்து வளர்ந்திருக்கின்றன.

ஆங்காங்கே மணல் திட்டுகள் காட்சி அளிக்கின்றன. அடர்ந்து வளர்ந்த அலையாத்தி மரங்களும், மணல் திட்டுகளும் இப்பகுதியை ஒரு அழகிய தீவு போல தோற்றம் அளிக்க செய்கின்றன.

எழில் சூழ்ந்த இப்பகுதியில் உள்ள கழிமுகத்தில் சினிமா படப்பிடிப்புக்காக புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதை அறிந்த அதிராம்பட்டினம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் புத்தர் சிலையை காண கழிமுகம் பகுதிக்கு வந்த வண்ணம் உள்ளனர். கடந்த சில நாட்களாக புத்தர் சிலையை காண வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனால் கீழத்தோட்டம் கிராமம் ஒரு சுற்றுலா தலமாக மாறி விட்டது. இந்த சிலை கழிமுகத்தின் தண்ணீருக்குள் 8 அடியும், தண்ணீருக்கு வெளியே சுமார் 12 அடி உயரம், 7 அடி அகலத்தில் பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது. முதலில் பார்க்கும்போது கற்களால் செய்யப்பட்ட சிலை போல தோற்றம் அளித்தாலும், உண்மையில் இந்த சிலை கற்களால் ஆனது அல்ல. சினிமா தொழில்நுட்ப கலைஞர்கள் அட்டை, மண் உள்ளிட்ட பொருட்களால் சிலையை வடிவமைத்துள்ளனர். 

மேலும் செய்திகள்