திருப்பூரில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வேன் டிரைவர் தீக்குளித்து தற்கொலை
தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்த வேன் டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் பி.என்.ரோடு பாண்டியன்நகர் பகுதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (வயது 38). இவர் சொந்தமாக வேன் வைத்து ஓட்டி வந்தார். திருப்பூர் பிச்சம்பாளையத்தில் வேஸ்ட் அட்டை குடோன் நடத்தி வருபவர் கிருஷ்ணமூர்த்தி (32). வெள்ளியங்கிரி கிருஷ்ணமூர்த்தியின் குடோனில் இருந்து அடிக்கடி பொருட்களை தனது வேனில் ஏற்றி சென்று வந்துள்ளார்.
இதன் காரணமாக அவர்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். சம்பவத்தன்று மதியம் பாண்டியன்நகர் பஸ் நிறுத்தம் அருகே வெள்ளியங்கிரி குடிபோதையில் தள்ளாடியபடி நின்றுள்ளார். அப்போது அங்கு சென்ற கிருஷ்ணமூர்த்தி வெள்ளியங்கிரியை காரில் ஏற்றிச்சென்று பிச்சம்பாளையத்தில் உள்ள தனக்கு சொந்தமான குடோனில் இறக்கி விட்டுவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை வெள்ளியங்கிரி திடீரென கிருஷ்ணமூர்த்தியின் குடோனை உள்பக்கமாக பூட்டிவிட்டு அங்கிருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதனால் அவர் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதனால் வலி தாங்க முடியாமல் வெள்ளியங்கிரி அலறி துடித்தார். அவருடைய சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கினர்.
ஆனால் அதற்குள் வெள்ளியங்கிரி உடல் முழுவதும் தீயால் எரிந்த நிலையில் கரிக்கட்டையாக கீழே சாய்ந்தார். இது குறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வெள்ளியங்கிரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக வெள்ளியங்கிரி குடிபோதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் என்றும் தெரிகிறது.
இது குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.