கூடலூர் அருகே: அரசு பஸ் கவிழ்ந்து 46 பயணிகள் படுகாயம்
கூடலூர் அருகே அரசு பஸ் கவிழ்ந்து 46 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
கூடலூர்,
பந்தலூர் தாலுகா தாளூரில் இருந்து தேவாலா வழியாக கூடலூருக்கு நேற்று காலை 11 மணிக்கு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் 85 பயணிகள் இருந்தனர். டிரைவர் ஜெகநாதன் பஸ்சை ஓட்டினார். நாடுகாணி பஜாரை கடந்து தடுப்பணை அருகே பஸ் சென்று கொண்டிருந்தது.
அப்போது கூடலூரில் இருந்து நாடுகாணியை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க பஸ்சை டிரைவர் திருப்பியதாக கூறப்படுகிறது. இதில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக சென்று 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதைகண்ட அப்பகுதி மக்கள் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெய்சிங் தலைமையிலான போலீசார், நிலைய அலுவலர் அனில்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் பொதுமக்கள் உதவியுடன் பஸ்சுக்குள் சிக்கி தவித்த பயணிகளை மீட்டனர். உடனடியாக அனைவரும் கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். படுகாயம் அடைந்தவர்கள் விவரம் வருமாறு:-
நாடுகாணியை சேர்ந்த லாவண்யா (வயது 18), பாக்கியலட்சுமி (55), சேரம்பாடி பானுமதி (48), நாயக்கன்சோலை வனசுந்தரி (58), ஊட்டி குழிசோலை வாலாமணி (63), பாண்டியாறு பாலசந்திரன் (59), சேரம்பாடி திவ்யபிரபா (28), மனோகரி (30), அபிநயா, சேரங்கோடு ஷீலாவதி (40), கீழ்நாடுகாணி பவித்ரா (13) உள்பட 46 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதில் பலர் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு சென்று விட்டனர். மேலும் 9 பேர் மேல் சிகிச்சைக்காக ஊட்டி, கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
கூடலூர் பகுதியில் மிகவும் பழுதடைந்த பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பின்றி பயணம் செய்யும் நிலை தொடர்கிறது. எனவே நல்ல நிலையில் இயங்கக்கூடிய பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்தநிலையில் கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை திராவிடமணி எம்.எல்.ஏ. மற்றும் அரசியல் கட்சியினர் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.
இந்த விபத்து குறித்து கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.