மார்த்தாண்டம் அருகே நிதி நிறுவன அதிபர் தற்கொலை

மார்த்தாண்டம் அருகே நிதி நிறுவன அதிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-11-04 22:15 GMT
குழித்துறை,

மார்த்தாண்டம் அருகே வடக்குத்தெருவை சேர்ந்தவர் அனுசேகர் (வயது 47). அந்த பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவர் கடந்த சில நாட்களாக நோயால் பாதிக்கப்பட்டு கேரள மாநிலம் நெய்யாற்றின்கரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அதே நேரத்தில் நோயால் பாதிக்கப்பட்டதால் மிகுந்த மன வருத்தத்துடன் காணப்பட்டார்.

இந்தநிலையில், வீட்டுக்கு வந்த அவர் வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு அருகில்  இருந்த ஆஸ்பத்திரிக்கு  கொண்டு சென்றனர். அங்கு அனுசேகரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.

இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசுக்கு தகவல்  கொடுக்கப்பட்டது. போலீசார், இறந்தவரின் உடலை கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தற்கொலை செய்து கொண்ட நிதிநிறுவன அதிபர் அனுசேகருக்கு மனைவியும், 1 மகனும், 1 மகளும் உள்ளனர்.

மேலும் செய்திகள்