அதிசய ஆந்தைகள்
‘இளம் வன விலங்கு புகைப்படக்கலைஞர்’ என்ற விருதை பெற்றிருக்கிறான் 10 வயதான அர்ஷ்தீப் சிங்.
‘இளம் வன விலங்கு புகைப்படக்கலைஞர்’ என்ற விருதை பெற்றிருக்கிறான் 10 வயதான அர்ஷ்தீப் சிங். இரும்பு பைப்புக்குள் இருந்து இரண்டு ஆந்தைகள் பரிதாபமாக எட்டிப்பார்க்கும் புகைப்படம் அவனுக்கு ஆசிய அளவிலான சிறந்த ஜூனியர் வன விலங்கு புகைப்படக்கலைஞர் விருதை பெற்றுக்கொடுத்திருக்கிறது. லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் நடந்த விழாவில் விருது வழங்கப்பட்டிருக்கிறது.
அப்போது அவன் எடுத்த ஆந்தை புகைப்படத்தை ஒளிபரப்பி அந்த படம் எடுக்கப்பட்ட விதத்தை வெகுவாக பாராட்டியிருக்கிறார்கள். அர்ஷ்தீப் சிங், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில் பெற்றோருடன் வசித்து வருகிறான். அவனுடைய தந்தைதான் புகைப்படம் எடுக்கும் ஆர்வத்தை அவனுக்குள் விதைத்திருக்கிறார். இயற்கை ஆர்வலரான அவர் இயல்பு மீறாத எதார்த்த புகைப்படங்களை எடுப்பதற்கு ஆர்வம் காட்டி இருக்கிறார். 6 வயதிலேயே அர்ஷ்தீப் சிங்குக்கு புகைப்படம் எடுக்கும் நுணுக்கத்தை கற்றுக்கொடுத்துவிட்டார். விருதுக்கு தேர்வான போட்டோ எடுக்கப்பட்ட விதம் பற்றி அர்ஷ்தீப் சிங் சொல்வதை கேட்போம்.
‘‘இயற்கை காட்சிகளை புகைப்படம் எடுப்பதற்காக என் தந்தையுடன் கபூர்தலாவிற்கு காரில் பயணம் செய்தேன். அப்போது ஒரு குழாய்க்குள் ஆந்தை இருப்பதை பார்த்தேன். உடனே என் தந்தையிடம் காரை நிறுத்துமாறு கூறிவிட்டு கீழே இறங்கினேன். அதற்குள் ஆந்தை குழாய்க்குள் சென்றுவிட்டது. மீண்டும் வெளியே வரும்வரை காத்திருந்தோம். சில நிமிடங்களில் இரண்டு ஆந்தைகள் வெளியே வந்தன. அவைநேராக என் கண்களை பார்த்தன. சட்டென்று கேமராவில் படம் பிடித்தேன். எடுத்த படத்தை பார்த்தபோது என் தந்தை திகைத்துப் போனார். அந்த ஆந்தைகள் சிறு அசைவும் இன்றி எங்கள் கண் களையே நோக்கிக்கொண்டிருந்தது போல் தெரிந்தது. அவை ஒவ்வொன்றும் ஏதோ சொல்ல விரும்பு கிறது என்பதை உணர்ந்தேன்’’ என்கிறார், அர்ஷ்தீப் சிங்.
அந்த புகைப்படத்தை பார்ப்பவர்களுக்கு ஆந்தை அவர்களை உற்றுநோக்கி பார்ப்பது போலவே தெரியும். அந்த தத்ரூப தருணம்தான் அர்ஷ்தீப் சிங்குக்கு விருதையும், பாராட்டுகளையும் பெற்று கொடுத்திருக்கிறது.