அம்மாவுக்கு ‘உதவிய’ ஆறு மாத குழந்தை
பெண் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது ஆறுமாத கைக்குழந்தையை போலீஸ் நிலைய மேஜையில் படுக்க வைத்துவிட்டு பணி செய்து கொண்டிருந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது தெரிந்த விஷயம்.
பெண் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது ஆறுமாத கைக்குழந்தையை போலீஸ் நிலைய மேஜையில் படுக்க வைத்துவிட்டு பணி செய்து கொண்டிருந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது தெரிந்த விஷயம். இப்போது அது அவருக்கு பாராட்டையும், பரிசையும் பெற்றுக்கொடுத்துள்ளது. அத்துடன் சொந்த ஊருக்கு இடமாறுதலாகி செல்வதில் இருந்து வந்த சிக்கலுக்கும் தீர்வு பிறந்துள்ளது. அந்த பெண் போலீஸ் கான்ஸ்டபிள் பெயர் அர்ச்சனா ஜெயந்த் சிங். இவருடைய பூர்வீகம் ஆக்ரா. அங்கிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜான்சி போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார்.
அர்ச்சனாவுக்கு இன்னொரு மகளும் இருக்கிறாள். அவள் கான்பூரில் உள்ள தன்னுடைய பாட்டி வீட்டில் தங்கி இருந்து 4-ம் வகுப்பு படித்து வருகிறாள். அர்ச்சனாவின் கணவர் குர்ககானில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அர்ச்சனா திருமணத்திற்கு பிறகு குடும்பத்தையும், மூத்த குழந்தையையும் பிரிந்து பணி செய்து வந்திருக்கிறார். இரண்டாவது குழந்தை பிறந்ததும் அதனையும் பிரிவதற்கு அவரது மனம் இடம் கொடுக்கவில்லை. குழந்தை தன்னுடைய அரவணைப்பிலேயே வளர வேண்டும் என்று முடிவு செய்தவர் பணிக்கு குழந்தையையும் தூக்கி சென்றுவிட்டார். அந்த மாநிலத்தில் போலீஸ் துறையில் கான்ஸ்டபிள்களுக்கு சொந்த மாவட்டத்தில் பணிபுரிவதற்கு அனுமதி இல்லாத நிலை இருக்கிறது. அதனால் வேறு வழியின்றி பணிக்கு மத்தியிலும் குழந்தையை தன்னுடனேயே வைத்திருக்கிறார்.
அர்ச்சனா போலீஸ் நிலையத்தில் குழந்தையை படுக்கவைத்து விட்டு பணி செய்து கொண்டிருந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானதுடன் உயர் போலீஸ் அதிகாரிகளின் கவனத்திற்கும் சென்றது. இதுபற்றி போலீஸ் டி.ஜி.பி கூறுகையில், ‘‘போலீஸ் கான்ஸ்டபிளின் குடும்ப நிலவரத்தை கேள்விப்பட்டதும் ஐ.ஜி.யிடம் பேசினேன். அர்ச்சனா கடினமாக உழைக்கிறார். குழந்தை பிறந்த பின்னரும் விடுப்பு எடுத்துக்கொள்ளாமல் கடமை உணர்வோடு செயல்படுகிறார். அதனால் அவருக்கு ஆயிரம் ரூபாய் வெகுமதி அளிக்க முடிவு செய்தோம்’’ என்றார்.
இதற்கிடையே அர்ச்சனாவை அவருடைய சொந்த ஊருக்கு இடமாற்றம் செய்வதற்கு போலீஸ் டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார். அத்துடன் பணியில் இருக்கும் போலீசாரின் குழந்தைகளை பராமரிப்பதற்கு ஏதுவாக போலீஸ் நிலையங்களில் ஒரு குழுவை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
‘‘நான் என் பெற்றோரையும், கணவரையும் சந்தித்து பேசி நெடுநாட்களாகிறது. தீபாவளிக்கு அவர்களுடன் சேர்ந்து இருப்பேன் என்று நினைக்கிறேன். பணி இடத்தில் சில பிரச்சினைகளை சந்தித்தேன். அதேவேளையில் சக ஊழியர்களிடமிருந்து ஆதரவு கிடைத்தது. இப்போது பணி இடமாற்றம் கிடைத்திருப்பது என் குடும்பத்தோடு சேர்ந்து வாழ உதவும். கான்பூரில் தங்கி படிக்கும் என் மூத்த மகளை ஆக்ராவுக்கு அழைப்பேன். என் கணவரும் என்னுடன் சேர்ந்துவிடுவார். போலீஸ் நிலையங்களில் ஒரு குழுவை நியமிப்பதற்கு எடுத்திருக்கும் முயற்சியும் மகிழ்ச்சி அளிக்கிறது. பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் பெண் போலீசார் அனைவருக்கும் இது உதவியாக இருக்கும்’’ என்கிறார், அர்ச்சனா.