அனைத்து பல்நோக்கு ஊழியர்களும் மழை நிவாரண பணிகளில் ஈடுபட வேண்டும் கவர்னர் கிரண்பெடி உத்தரவு

அனைத்து பல்நோக்கு ஊழியர்களும் மழை நிவாரண பணிகளில் ஈடுபட வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2018-11-04 00:18 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி வாரஇறுதி நாட்களில் ஒவ்வொரு பகுதியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வின் போது நிலத்தடி நீர் மற்றும் தூய்மை பணிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் நேற்று நகர பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பெரியவாய்க்கால், சின்னவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று அங்கு நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார்.

அப்போது வாய்க்கால்களை தூர்வார தன்னார்வலர்கள் நிதி உதவி அளித்தும் பணியை மேற்கொள்ளாமல் இருந்ததை பார்த்தார். மேலும் பொதுப்பணித்துறையின் பல்நோக்கு ஊழியர்கள் அங்கு இல்லாததை கண்டு கவர்னர் ஆத்திரமடைந்தார்.

இதனையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகளை அழைத்து பருவ மழைக்காலம் முடியும் வரை பல்நோக்கு ஊழியர்களை காலை 6 மணி முதல் 2 மணி வரையும், மதியம் 2 மணி முதல் 10 மணி வரையும் 2 ஷிப்ட் முறையில் பணி செய்ய வைக்கும்படி பிறப்பித்த உத்தரவை ஏன் நிறைவேற்றவில்லை என்று கேட்டார்.

அப்போது அதிகாரிகள் பல்நோக்கு ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும், ஊழியர்கள் சாலை, நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பு, எம்.எல்.ஏ.க்கள் அலுவலகம் உள்ளிட்ட மாற்றுப் பணிகளில் இருப்பதாக தெரிவித்தனர்.

இதனை ஏற்க மறுத்த கவர்னர் கிரண்பெடி எம்.எல்.ஏ.க்கள் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களில் பணி செய்யும் அனைத்து பல்நோக்கு ஊழியர்களையும் உடனடியாக துறைக்கு திரும்ப அழைக்கும் படியும், பருவமழைக்காலம் முடியும் வரை அவர்கள் கால்வாய் சீரமைப்பு பணிகள் மற்றும் மழைநிவாரண பணிகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும். பணிகள் முடிந்த பின்னர் மாற்று பணிகளுக்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை செய்யாமல் காலம் கடத்தும் ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்து வேறு ஒப்பந்ததாரருக்கு பணியை வழங்கும்படி உத்தரவிட்டார்.

இதன்பின் கவர்னர் கிரண்பெடி நிருபர்களிடம் கூறும் போது, ‘தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காமல் தடுக்க வேண்டியது அவசியம். இதை செய்தால் மழை பெய்யும் காலங்களில் பாதிப்பு இருக்காது. நிவாரண நிதியும் வீணாக்கப்படாமல் இருக்கும்’ என்றார்.

மேலும் செய்திகள்