நெல் பயிருக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம் வேளாண் அதிகாரி தகவல்
வாடிப்பட்டி வட்டார விவசாயிகள் நெல் பயிருக்கு காப்பீடு செய்யலாம் என்று வேளாண்மை அதிகாரி தனலட்சுமி தெரிவித்தார்.
வாடிப்பட்டி,
வாடிப்பட்டி வட்டார வேளாண்மை துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகளுக்கு பாரத பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தின்கீழ் நுண்ணீர் மேளா மற்றும் சிறு, குறு விவசாயி சான்று, அடங்கல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேளாண்மை துணை இயக்குனர்(மாநில திட்டம்) தனலட்சுமி தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குனர் ராமசாமி, தாசில்தார் பார்த்தீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக வேளாண்மை அலுவலர் பாண்டி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் வேளாண்மை துணை இயக்குனர் தனலட்சுமி கூறும்போது, இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வாடிப்பட்டி வட்டாரத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.405 வீதம் பிரிமியம் தொகை செலுத்தி பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். காப்பீடு செய்ய வருகிற 30-ந்தேதி கடைசி நாளாகும். காப்பீடு செய்வதன் மூலம் விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பயிர் காலத்திற்கும், அறுவடைக்கு பின்னும் ஏற்படும் இழப்பு, இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் இழப்பு ஆகியவற்றிற்கு காப்பீட்டு தொகையாக ரூ.27 ஆயிரம் வரை பெறலாம் என்றார்.
பின்னர் பாரத பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம், மழைத்தூவான் கருவிகள் 100 சதவீத மானியத்தில் அமைப்பதற்கான விண்ணப்பம் பெறப்பட்டு விவசாயிகளுக்கு சிறு, குறு விவசாயிக்கான சான்று வழங்கப்பட்டது. இதில் துணை வேளாண்மை அலுவலர் மனோகரன், உதவி வேளாண்மை அலுவலர்கள் சந்திரசேகரன், தங்கையா மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், அட்மா திட்ட பணியாளர்கள், மதுரை வேளாண்மை கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனர். முடிவில் வேளாண்மை உதவி அலுவலர் பாஸ்கரன் நன்றி கூறினார்.