28 பேருக்கு பன்றி காய்ச்சல் கலெக்டர் நடராஜன் பேட்டி

மதுரை மாவட்டத்தில் 28 பேருக்கு பன்றி காய்ச்சல் இருப்பதாக கலெக்டர் நடராஜன் கூறினார்.

Update: 2018-11-03 23:00 GMT
மதுரை,
மதுரை மாவட்ட கலெக்டர் நடராஜன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மதுரை மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2017) 4 ஆயிரத்து 118 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருந்தது. இந்த ஆண்டு இதுவரை 202 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 28 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொசு ஒழிப்பு பணி மூலம் தான் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க முடியும். எனவே காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக 1,066 சிறப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வீடுதோறும் சென்று கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து மருந்து தெளித்து வருகின்றனர்.

டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமான 105 பேருக்கு ரூ.90 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. காய்ச்சலுக்கு உயிரிழந்தவர்கள் நோய் முற்றிய நிலையில் மருத்துவமனைக்கு வந்தவர்கள். அதுமட்டுமின்றி அவர்களுக்கு காய்ச்சல் தவிர மஞ்சள் காமாலை போன்ற நோய்களும் இருந்துள்ளது. காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் தனியாக வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அரசு ஆஸ்பத்திரி மற்றும் 8 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரத்த வங்கி செயல்படுகிறது.

டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றி காய்ச்சல் குறித்து பொதுமக்கள் பயப்பட வேண்டாம். காய்ச்சலுக்கு பொதுமக்கள் மருந்து கடைகளில் தாமாகவே மருந்துகளை வாங்கி சாப்பிட வேண்டாம். டாக்டர்கள் அறிவுரைப்படி மருந்து சாப்பிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்