தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் பயணம்: ரெயில், பஸ்களில் நிரம்பி வழியும் மக்கள் கூட்டம்

சென்னையில் வசிக்கும் மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்வதால், ரெயில் மற்றும் பஸ்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

Update: 2018-11-03 22:16 GMT
சென்னை,

தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், வியாபாரம் அல்லது சொந்த தொழில் செய்பவர்கள், உயர் கல்வி பயிலும் மாணவ-மாணவிகள் என பல்வேறு தரப்பினரும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு கடந்த சில தினங்களாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் ரெயில் மற்றும் பஸ்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

அதன்படி, நேற்றும் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் மற்றும் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் ரெயில்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரி, திருவனந்தபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமேசுவரம், மதுரை, திருச்சி போன்ற ஊர்களுக்கு செல்லும் ரெயில்களில் உள்ள பொதுப்பெட்டிகளில் நேற்று பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. 3 பேர் இருக்கும் இருக்கைகளில் 5 அல்லது 6 பேர் அமர்ந்து இருந்தனர். படுக்கைகளிலும் 3 அல்லது 4 பேர் அமர்ந்து பயணம் செய்தனர். கழிப்பறைகளுக்குக்கூட செல்ல முடியாதபடி பயணிகள் அமர்ந்து இருந்தனர். பெண்களுக்கான பெட்டிகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

எழும்பூரிலேயே ரெயில்கள் நிரம்பி வழிந்த நிலையில், இன்னும் தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம் போன்ற ஊர்களுக்கு ரெயில் செல்லும் போது, அங்கு இருந்தும் மக்கள் அதிக அளவில் ரெயில்களில் பயணம் செய்ய ஏறியதால் கடுமையான கூட்ட நெரிசலிலேயே மக்கள் பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலை இருந்தது.

இதேபோன்று, சென்னை கோயம்பேட்டில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பஸ்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கோயம்பேடு முதல் பெருங்களத்தூர் வரை மிகுந்த போக்குவரத்து நெரிசலுக்குள் பஸ்கள் மெதுவாக சென்றன.

மேலும் செய்திகள்