வசாய் அருகே சிறுத்தைப்புலி தோலுடன் 2 பேர் கைது

வசாய் அருகே சிறுத்தைப்புலி தோல் விற்பனை செய்ய வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2018-11-03 23:30 GMT
வசாய்,

பால்கர் மாவட்டம் வசாய் அருகே சம்பவத்தன்று மும்பை - ஆமதாபாத் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஓட்டல் அருகே 2 பேர் சிறுத்தைப்புலி தோல் விற்பனை செய்ய வருவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் அங்கு சாதாரண உடையில் சென்று கண்காணித்தனர்.

அப்போது, அங்கு 2 பேர் சந்தேகத்திற்கிடமாக வந்தனர். அவர்களை பிடித்து போலீசார் சோதனை போட்டனர்.

இந்த சோதனையின் போது, அவர்கள் வைத்திருந்த பையில் சிறுத்தைப்புலி தோல் இருந்ததை கண்டுபிடித்து போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.10 லட்சம் என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் அவர்களது பெயர் கஜானன் தேசாய் (வயது45), அர்ஜூன் தாயடே (47) என்பது தெரியவந்தது. போலீசார் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றினர்.

பின்னர் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வருகிற 6-ந் தேதி வரை போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட சிறுத்தைப்புலி தோலை யாரிடம் விற்பனை செய்ய வந்தனர் என்பதை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்