“சர்வதேச அறிவியல் திரைப்பட விழா” ஆம்புலன்ஸ் வாகனம் வருவதை முன்னரே எச்சரிக்கும் கருவி அறிமுகம் மாணவர்கள் பரிசோதித்து பார்த்தனர்
சர்வதேச அறிவியல் திரைப்பட விழாவில் ஆம்புலன்ஸ் வாகனத்தை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கும் கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதனை மாணவர்கள் பரிசோதனை செய்து பார்த்தனர்.
மதுரை,
மதுரை சேத்தனா மெட்ரிக் பள்ளியில் சர்வதேச அறிவியல் திரைப்பட திருவிழா நடந்தது. மதுரையில் இந்த விழா நடப்பது இதுவே முதல் முறையாகும். அதில் உலக அளவிலான கண்டுபிடிப்புகள் மாணவர்களுக்கு திரைப்படமாக காண்பிக்கப்பட்டது. முன்னதாக பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் தண்ணீரை சூடாக்கும் கருவி, ஏர் கூலர், விவசாய பாசன கருவிகள் உள்பட தங்களது படைப்புகளை காட்சிக்காக வைத்திருந்தனர்.
அதில் சிறப்பம்சமாக ஆம்புலன்ஸ் வாகனத்தை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கும் கருவியை மாணவர்கள் சோதனை செய்து பார்த்தனர். இந்த கருவி மேலூரை சேர்ந்த ஆராய்ச்சியாளர் செந்தில்(வயது 38) என்பவரின் கண்டுபிடிப்பாகும். அவர் மாணவர்கள் அறிந்து கொள்ளுவதற்கு வசதியாக இந்த கருவியை காட்சிப்படுத்தி இருந்தார்.
இதுகுறித்து செந்தில் கூறியதாவது:-
நான் 8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து இருக்கிறேன். எனது நிறுவனம் மூலம் விவசாய பணிகளை எளிதாக்கும் வகையில் பல்வேறு கருவிகளை வடிவமைத்து இருக்கிறேன். இந்த நிலையில் எனது நண்பன் ஒருவன் விபத்தில் சிக்கி விட்டான். அவனை ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றோம். ஆனால் கடும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக ஆஸ்பத்திரிக்கு தாமதமாக தான் செல்ல முடிந்தது. இதனால் எனது நண்பன் உயிரிழந்து விட்டான்.
இது போன்ற சம்பவம் இனி நடக்க கூடாது என்பதற்காக ஆம்புலன்ஸ் வாகனம் விரைவாக ஆஸ்பத்திரிக்கு செல்வதற்கு வசதியாக, ஆம்புலன்ஸ் வாகனம் வருவதை முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் விதமாக கருவிகளை வடிவமைத்து இருக்கிறேன்.
எனது இந்த கருவிகளை தற்போதுள்ள மின் விளக்கு கம்பத்தில் பொருத்த வேண்டும். அதேபோல் தற்போது சிக்னல்களில் கூடுதலாக ஊதா கலர் எரியும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். இதன்மூலம் 5 கிலோ மீட்டருக்கு முன்பே ஆம்புலன்ஸ் வாகனம் வருவதை அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்ய முடியும். இதன் மூலம் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தப்பட்டு, ஆம்புலன்ஸ் விரைவாக ஆஸ்பத்திரியை நோக்கி செல்லும். எனது இந்த கண்டுபிடிப்பு முறையை அரசுக்கு இலவசமாக தர தயாராக இருக்கிறேன். விரைவில் கலெக்டரை சந்தித்து இந்த கண்டுபிடிப்பு குறித்து விளக்க உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.