இருளர் குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனை பட்டா - கலெக்டர் வழங்கினார்

செய்யாற்றை வென்றான் கிராமத்தில் இருளர் குடும்பத்தினருக்கு, இலவச வீட்டுமனை பட்டாவினை கலெக்டர் வழங்கினார்.

Update: 2018-11-03 23:00 GMT
செய்யாறு,

செய்யாறு தாலுகா செய்யாற்றை வென்றான் கிராமத்தின் சாலையோரத்தில் குடிசை வீடு கட்டி 8 இருளர் குடும்பத்தினர் வசித்து வந்தனர். கடந்த 24-ந் தேதி அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி திடீரென அப்பகுதியில் சென்று பார்வையிட்டார். அப்போது அங்கு வசிக்கும் பெண்கள் குடிசை வீடுகளில் அடிப்படை வசதியின்றி, சுகாதாரமற்ற நிலையில் வசிப்பதால் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டு, தோல் வியாதி உள்ளிட்ட பல்வேறு நோய் தாக்கத்தால் அவதிப்படுவதாக தெரிவித்தனர்.

குறைகளை கேட்டறிந்த கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் மருத்துவ குழுவினர் அப்பகுதிக்கு சென்று குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.

மேலும் கலெக்டர் உத்தரவின்பேரில், 8 இருளர் குடும்பத்தினர் குடியிருக்கும் பகுதி நீர்நிலை புறம்போக்கு என்பதால், செய்யாற்றை வென்றான் கிராமத்தில் வேறு இடம் தேர்வு செய்யப்பட்டது.

இதனையடுத்து கலெக்டர் கந்தசாமி, அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாவையும், அங்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலமாக புதிய வீடு கட்டுவதற்கான ஆணையையும் வழங்கினார்.

அப்போது செய்யாறு தாசில்தார் மகேந்திரமணி உடனிருந்தார்.

மேலும் செய்திகள்