தீபாவளி பொருட்கள் வாங்க பெரம்பலூர்-அரியலூர் கடைவீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

தீபாவளி பொருட்கள் வாங்குவதற்காக பெரம்பலூர், அரியலூர் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

Update: 2018-11-03 22:45 GMT
அரியலூர்,

தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் புத்தாடைகளை வாங்குவதற்காகவும், இனிப்பு வகைகள், பட்டாசுகள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக பெரம்பலூர் கடைவீதி, போஸ்ட் ஆபீஸ்தெரு, சூப்பர் பஜார், பள்ளிவாசல் தெரு, பழைய பஸ்நிலையம், புதிய பஸ்நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் அந்தப்பகுதியில் எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதியபடி இருக்கிறது. இதனால் அந்தப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியிலும், தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் முதல் பழைய பஸ் நிலையம் வரையிலான சாலையில் திடீரென பட்டாசு கடைகள், இனிப்பு கடைகள் ஏராளமாக ஆரம்பிக்கப்பட்டு விற்பனை தொடங்கியுள்ளது. மேலும் ஜவுளிக்கடைகளிலும் புது ஆடை வாங்குவதற்காக கூட்டம் அலைமோதுகிறது.

பெரம்பலூர் கடைவீதி, போஸ்ட் ஆபீஸ் தெரு உள்ளிட்ட பகுதிகளில் தரைக் கடைகளாக ஜவுளிக்கடைகள் ஏராளமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கு வியாபாரிகள் ஆடைகளை கூவி, கூவி... விற்பனை செய்கின்றனர். அவர்களிடம் பொதுமக்கள் பேரம் பேசி ஆடைகளை வாங்கி சென்றதை காணமுடிந்தது. தீபாவளி பண்டிகைக்காக பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டதால் சிலர் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியோடு பொருட்களை வாங்கி செல்கின்றனர். வெளியூரில் இருந்து பெரம்பலூர் மாவட்டத்தில் தங்கியிருந்து வேலை செய்பவர்கள் தீபாவளிக்காக முன்னதாக விடுமுறை எடுத்து சொந்த ஊருக்கு செல்வதால் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்திலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. பெரம்பலூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இதே போல் அரியலூர் புதுமார்க்கெட் வீதி, எம்.பி.கோவில் தெரு, சின்னகடை தெரு, பெரியகடை தெரு உள்ளிட்ட முக்கிய கடைவீதிகளில் ஜவுளி எடுப்பதற்காகவும், தீபாவளிக்கு பொருட்கள் வாங்குவதற்காகவும் மக்கள் கூட்டம் அலைமோதிய வண்ணம் இருந்தது. மக்களின் கூட்டத்தை பயன்படுத்தி பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட கடைவீதிகளில் திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு போலீசார் ஆங்காங்கே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளையும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து பார்வையிட்டு போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். 

மேலும் செய்திகள்