புதுச்சேரியில் சரவெடிகள் வெடிக்க தடை தீயணைப்புத்துறை அறிவிப்பு

புதுச்சேரியில் சரவெடிகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறை அறிவித்துள்ளது.

Update: 2018-11-03 22:15 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி கோட்ட தீயணைப்பு அதிகாரி இளங்கோ வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி மக்கள் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஆயத்தம் செய்து வருகிறோம். இந்த தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை வெடிப்பவர்கள் கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

* உயரே சென்று வெடிக்கும் ராக்கெட், அவுட் போன்ற பட்டாசுகள் மற்றும் சீன பட்டாசுகள் விற்பது விற்பனையாளர்களின் ஒத்துழைப்புடன் தடை செய்யப்படுகிறது. தடையை மீறி உபயோகித்து அதனால் உயிர் சேதம், பொருட்கள் சேதம் ஏற்பட்டால் அதற்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* பட்டாசுகளை நடு வீதியில் வைத்து கொளுத்துவது ஆபத்து. சிறுவர்கள் பட்டாசு வெடிக்கும்போது பெரியவர்கள் உடனிருப்பது பாதுகாப்பானது.

பருத்தி ஆடைகள், காலணிகள்

* கம்பி மத்தாப்பு போன்றவற்றை எரித்த பின்பு தண்ணீரில் போட்டுவிடுவது பாதுகாப்பானது.

* பட்டாசுகளை வீடுகளில் வைத்திருக்கும்போது தீப்பொறி மற்றும் விளக்கு ஆகியவற்றை அருகில் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பட்டாசு அருகே புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும்.

* வெடிக்காத புகைந்து போன பட்டாசுகளை நீண்ட குச்சிகளை கொண்டு அப்புறத்தப்படுத்த வேண்டும்.

* பட்டாசுகளை வெடிக்கும்போது குழந்தைகள் பருத்தி ஆடைகள் மற்றும் காலணிகளை அணிந்திருப்பது பாதுகாப்பானது.

* குடிசைப்பகுதிகளில் பட்டாசுகள் வெடிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

* கண்ணாடி பாட்டில், தகர டப்பா இவற்றினுள் பட்டாசுகளை வைத்து வெடிக்க கூடாது.

* சரவெடிகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

வியாபாரிகளுக்கும் விதிமுறைகள்

இதேபோன்று பட்டாசு வியாபாரிகளும் கீழ்கண்ட விதிமுறைகளை கடைப்பிடித்து இந்த தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாட அனைவரின் ஒத்துழைப்பையும் கேட்டுக்கொள்கிறோம்.

* எளிதில் பற்றி எரியக் கூடிய மூலப்பொருட்களால் தயாரிக்கப்படும் சீன தயாரிப்பு பட்டாசுகள் மற்றும் மேலே சென்று வெடிக்கக்கூடிய பட்டாசு வகைகள் கூரை வீடுகள் மற்றும் பள்ளிகளின் மேல் விழுந்து எரிந்து பெரும் சேதத்தை ஏற்படுத்திய தீ விபத்துக்களை கடந்த காலங்களில் நாம் அனுபவபூர்வமாக கண்டோம். எனவே அவ்வகை பட்டாசுகள் விற்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

* அனுமதி பெற்ற வியாபாரிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட உரிமத்தில் குறிப்பிட்டுள்ள தடை செய்யப்பட்டுள்ள பட்டாசுகளை வாங்கி வைத்திருக்கவோ அல்லது விற்கவோ கூடாது. அப்படி தடையை மீறி விற்றாலும் உரிமத்தில் கண்டுள்ள அளவுக்கு அதிகமான பட்டாசுகளை வைத்திருந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

* தகுந்த உரிமம் இல்லாமல் அதிக அளவில் பட்டாசுகளை வரவழைப்பதோ, வைத்திருப்பதோ அல்லது விற்பனை செய்வதோ தண்டனைக்குரிய குற்றமாகும்.

சிறுவர்கள் பட்டாசு விற்பனை...

* அனுமதி பெற்ற இடத்தின் வரை படத்துடன் உரிமம் கடையில் வைத்திருக்க வேண்டும்.

* சிறுவர்களை பட்டாசு வியாபாரத்தில் ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும்.

* தராசு மற்றும் இரும்பிலான பொருட்களை கொண்டு பட்டாசுகளை கையாளக்கூடாது.

* பட்டாசுகளை வைத்திருப்பவர்கள் தங்கள் கடைகளில் போதுமான தண்ணீரை பேரல் அல்லது பெரிய பாத்திரத்தில் நிரப்பி வைக்க வேண்டும்.

* பட்டாசு கடை அலங்காரத்திற்கு மின்சார சீரியல் செட் பல்புகளை பயன்படுத்தக் கூடாது.

* பட்டாசு கடைகளுக்கு எதிரில் பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்காதீர்கள்.

* மேலும் தீயணைப்புத்துறை சிபாரிசு செய்த தீயணைப்பு சாதனங்களை சரியான முறையில் வைத்து பராமரிக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்