கோவையில் திருமண மண்டபம் கட்டும் பணி: 2-வது மாடியில் கான்கிரீட் தளம் இடிந்து விழுந்து 18 பேர் படுகாயம் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
கோவையில் திருமண மண்டபம் கட்டும் பணியின்போது 2-வது மாடியில் போடப்பட்ட கான்கிரீட் தளம் இடிந்து விழுந்தது. இதில் 18 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சரவணம்பட்டி,
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை கணபதிபுதூரை சேர்ந்தவர் சதீஷ். இவருக்கு கணபதியை அடுத்த விநாயகபுரம் விளாங்குறிச்சி சாலையில் சொந்த இடம் உள்ளது. இங்கு 2 மாடியில் திருமண மண்டபம் கட்டும் பணி நடந்து வருகிறது.
இந்த மண்டபத்தின் 2-வது தளத்தில் கான்கிரீட் போடும் பணி என்ஜினீயர் வரதராஜன் தலைமையில் நேற்று நடந்தது. இந்த பணியில் ஜெயங்கொண்டம் இளையூர் பகுதியை சேர்ந்த 25 பேரும், கம்பி கட்டும் பணியில் திண்டுக்கல் மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்த 15 பேரும் ஈடுபட்டு இருந்தனர்.
இந்த நிலையில் மாலை 4 மணியளவில் கான்கிரீட் போடும் பணி முடிவடையும் நிலையில் இருந்தது. அப்போது திடீரென்று மழை கொட்டியது. இதனால் கான்கிரீட் போடும் பணியை தொழிலாளர்கள் நிறுத்தினார்கள்.
இதையடுத்து 2-வது தளத்தில் நின்று கொண்டு இருந்த உரிமையாளர் சதீஷ், என்ஜினீயர் வரதராஜன் மற்றும் தொழிலாளர்கள் கீழே இறங்கிக்கொண்டு இருந்தனர். பலத்த மழை பெய்ததால், புதிதாக போடப்பட்ட கான்கிரீட் தளத்தில் தண்ணீர் தேங்கியது.
இதனால் கான்கிரீட் தளம் அமைப்பதற்கு கீழே வைக்கப்பட்டு இருந்த கம்பிகள் அதிக பாரம் தாங்காமல் சரிந்தன. இதையடுத்து கண் இமைக்கும் நேரத்தில் கான்கிரீட் தளம் பயங்கர சத்தத்துடன் இடிந்து அங்கு நின்று கொண்டு இருந்தவர்கள் மீது விழுந்தது. இதில் உரிமையாளர் சதீஷ், என்ஜினீயர் வரதராஜன் உள்பட 18 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதனால் அவர்கள் வலி தாங்காமல் கூச்சல் போட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த சரவணம்பட்டி போலீசார் மற்றும் கணபதி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் படுகாயம் அடைந்த 18 பேரை போராடி மீட்டனர்.
இந்த அறிந்த வி.சி.ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். படுகாயம் அடைந்த 9 பேர் கணபதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும், 3 பேர் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும், 6 பேர் கோவை அரசு ஆஸ்பத்திரியி லும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் பற்றிய தகவல் அந்தப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் அங்கு ஏராளமான பொதுமக்கள் அங்கு குவிந்தனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினார்கள். புதிதாக போடப் பட்ட கான்கிரீட் தளம் இடிந்து விழுந்ததற்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.