ரூ.41 லட்சம் செலவில் ஊட்டி கோடப்பமந்து கால்வாய் தூர்வாரும் பணி மும்முரம்
ஊட்டி கோடப்பமந்து கால்வாய் ரூ.41 லட்சம் செலவில் தூர் வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ஊட்டி,
ஊட்டி கோடப்பமந்து பகுதியில் இருந்து சேரிங்கிராஸ் வழியாக சிறுவர் பூங்கா பகுதியில் உள்ள தடுப்பணைக்கு கால்வாய் செல்கிறது. பின்னர் அங்கு இருந்து படகு குழாமுக்கு தண்ணீர் சென்றடைகிறது. இக்கால்வாயில் கழிவு பொருட்கள், சேறுகள் தேங்கி வருகிறது. இதனால் மழைக்காலத்தில் கால்வாயில் தண்ணீர் அதிகரித்து கிரீன்பீல்டு, சேரிங்கிராஸ், லோயர் பஜார் பகுதியில் உள்ள சாலைகளில் தண்ணீர் வழிந்தோடுகிறது.
இதனால் பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதையொட்டி கோடப்பமந்து கால்வாயை தூர்வார மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து ரூ.41 லட்சம் செலவில் வேளாண் பொறியியல் துறையினர் கால்வாயை தூர்வாரும் பணியை கடந்த 1 வாரத்துக்கு முன்பு தொடங்கினர். இந்த பணி தற்போது மும்முரமாக நடை பெற்று வருகிறது. இந்த நிலை யில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா இதனை பார்வையிட்டு பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டார். முன்னதாக கூக்கல்தொரை ஊராட்சியில் மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 100 விவசாயிகளுக்கு விலையில்லா நுண்ணீர் பாசன கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பாசன கருவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-
இயற்கை விவசாயம் மேற்கொள்வதற்கு விவசாயிகள் முயற்சி செய்ய வேண்டும். இதன் மூலம் செலவு மிகவும் குறையும். கூக்கல்தொரை உழவர் உற்பத்தியாளர் குழு மாவட்டத்தில் உள்ள மற்ற உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இதனைதொடர்ந்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டம் சார்பில் மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் கீழ் கூக்கல்தொரை முதல் கம்பட்டி கம்மை பகுதி வரை ரூ.41 லட்சம் மதிப்பில் 700 மீட்டர் தூரம் நடைபெறும் சாலைப்பணியை கலெக்டர் பார்வையிட்டார்.
இதேபோல் கூக்கல்தொரை முதல் அரங்கிபுதூர் வரை மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 95 ஆயிரம் செலவில் 200 மீட்டர் தூரம் மேற்கொள்ளப்படும் சாலைப்பணியை ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகள் உடன் இருந்தார்.