பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலையாக கிலோவுக்கு ரூ.14.72 நிர்ணயம் தேயிலை வாரிய அதிகாரி தகவல்
பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலையாக கிலோவுக்கு ரூ.14.72 நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குனர் பால்ராசு தெரிவித்து உள்ளார்.
மஞ்சூர்,
நீலகிரி மாவட்டத்தில் 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளும், 100-க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக பச்சை தேயிலை விலை வீழ்ச்சி அடைந்து வருவதால் விவசாயிகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பச்சை தேயிலைக்கு குறைந்தபட்சமாக கிலோ ஒன்றுக்கு ரூ.30 விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் நீண்ட காலமாக போராடி வருகிறார்கள்.
ஆனால், மத்திய, மாநில அரசுகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த விவசாயிகள் பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்யக்கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்ய உத்தரவிட்டனர். அதனைதொடர்ந்து தேயிலை வாரியம் சார்பில் மாவட்ட கலெக்டர் தலைமையில் விவசாயிகள் அடங்கிய விலை நிர்ணய கமிட்டி தற்காலிகமாக அமைக்கப்பட்டது. இந்த விலை நிர்ணய கமிட்டி சார்பில் மாவட்டத்தில் இயங்கி வரும் தேயிலை தொழிற்சாலைகளில் விற்பனை செய்யப்படும் தேயிலைத்தூள் விலையின் சராசரி விலையை கொண்டு குறைந்தபட்ச விலை வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குனர் பால்ராசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பச்சை தேயிலைக்கு நவம்பர் மாத குறைந்தபட்ச கொள்முதல் விலையாக கிலோவுக்கு 14 ரூபாய் 72 காசு விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதனை அனைத்து தேயிலை தொழிற்சாலைகளும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இதனை தென்னிந்திய தேயிலை வாரியத்தின் வளர்ச்சி அலுவலர்கள், தொழிற் சாலை ஆலோசனை அதிகாரிகள், துணை இயக்குனர்கள் விவசாயிகளுக்கு குறைந்த பட்ச விலை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு குறைந்தபட்ச விலை நிர்ணயத்தை கடைப்பிடிக்காத தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.