மதுக்கடையை மூடக்கோரி 2–வது நாளாக கொட்டும் மழையில் பொதுமக்கள் போராட்டம் போலீஸ் குவிப்பு

இரணியல் அருகே மதுக்கடையை மூடக்கோரி 2–வது நாளாக கொட்டும் மழையில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டத்தையொட்டி அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Update: 2018-11-03 23:00 GMT
அழகியமண்டபம்,

இரணியல் அருகே உள்ள காட்டுவிளை பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டது. இந்த கடைக்கு அப்பகுதி மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்த மதுக்கடை அமைந்துள்ள இடத்தை சுற்றிலும் கடுவாவிளை, ஆத்திக்காங்கோயன்விளை உள்பட 10–க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் அனைவரும் மதுக்கடை அமைந்துள்ள சாலை வழியாகவே முக்கிய இடங்களுக்கு சென்று வருகிறார்கள். பள்ளி செல்லும் மாணவ–மாணவிகளும் இந்த வழியை தான் பயன்படுத்துகின்றனர். மேலும் மதுக்கடைக்கு அருகில் மிகவும் பழமை வாய்ந்த சிவன் கோவில் இருக்கிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களும் மதுக்கடையை கடந்து தான் வர வேண்டி உள்ளது.

இதன் காரணமாக தான் அந்த மதுக்கடையை உடனே மூட வேண்டும் என்று மக்கள் திரளாக வந்து வலியுறுத்தினார்கள். ஆனாலும் மதுக்கடை மூடப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி இந்த மதுக்கடையை நேற்று முன்தினம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.  

இதைத் தொடர்ந்து கல்குளம் தாசில்தார் சஜித், இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முத்துகுமார் ஆகியோர் அங்கு வந்து முற்றுகை போராட்டம் நடத்திய மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்த நிலையில் முற்றுகை போராட்டம் நேற்று 2–வது நாளாக தொடர்ந்தது. அதாவது நேற்று முன்தினம் மதுக்கடையை முற்றுகையிட்ட மக்கள் அங்கிருந்து கலைந்து செல்லவே இல்லை. இரவிலும் மதுக்கடை முன்பே அமர்ந்து தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தினர். இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு முழுவதும் மழை பெய்தது. ஆனால் மழையையும் பொருட்படுத்தாமல் மதுக்கடை முன் கூடாரம் அமைத்து மக்கள் பேராட்டத்தை தொடர்ந்து நடத்தினார்கள்.  

போராட்டத்தில் ஆண்கள் கூட்டத்தைவிட பெண்கள் கூட்டமே அதிகமாக இருந்தது. பெண்கள் தங்களது குழந்தைகளையும் அழைத்து வந்து போராட்டத்தில் பங்கேற்றனர். மதுக்கடைக்கு எதிராக பொதுமக்கள் நடத்தும் தொடர் போராட்டம் அப்பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து குலசேகரம் போலீஸ் உதவி சூப்பிரண்டு கார்த்திக், துணை தாசில்தார் மேரி ஸ்டெல்லா, குருந்தன்கோடு வருவாய் ஆய்வாளர் ராஜா, கிராம நிர்வாக அதிகாரி எழில் ஆக்னஸ் ஆகியோர் அங்கு வந்து 2–வது நாளாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மதுக்கடையை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உதவி போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் கூறினார். ஆனால் கடையில் உள்ள மதுபானங்களை அங்கிருந்து அப்புறப்படுத்திய பிறகுதான் தங்களது போராட்டத்தை கைவிடுவதாக மக்கள் அனைவரும் ஒன்றாக கூறினர்.

போலீசார் எவ்வளவோ கட்டாயப்படுத்தியும் பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிடவில்லை. தங்களது கோரிக்கை நிறைவேற்றினால் மட்டுமே அங்கிருந்து கலைந்து செல்லும் நோக்கத்தில் குறியாக இருந்தனர். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எனவே முற்றுகை போராட்டம் தொடர்ந்து நடந்தது.

போராட்டத்தையொட்டி அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்