சாத்தான்குளம், குலசேகரன்பட்டினத்தில் பலத்த மழை
சாத்தான்குளம், குலசேகரன்பட்டினத்தில் பலத்த மழை பெய்தது.;
சாத்தான்குளம்,
சாத்தான்குளம், குலசேகரன்பட்டினத்தில் பலத்த மழை பெய்தது.
விடிய விடிய பலத்த மழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 1–ந்தேதி தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவில் பெரும்பாலான இடங்களில் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்தது. சாத்தான்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் மிதமான மழை பெய்தது. பின்னர் நள்ளிரவில் இருந்து விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகள், தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
சாத்தான்குளம் கருமேனி ஆற்றுப்பாலத்தின் வழியாக காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அமுதுண்ணாக்குடி குளம், கரடிகுளம் உள்ளிட்ட குளங்களில் பாதி அளவுக்கும் அதிகமாக தண்ணீர் நிரம்பியது.
வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
சாத்தான்குளம் அமராவதி குளத்துக்கு செல்லும் வாய்க்காலில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அதன் அருகில் உள்ள ஆர்.சி. வடக்கு தெருவில் உள்ள 20 வீடுகளில் தண்ணீர் புகுந்தது. உடனே சாத்தான்குளம் நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் நாகராஜன் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து வாய்க்கால் கரையில் உள்ள சீமை கருவேல மரங்கள், புதர் செடிகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி, தண்ணீரை வடிய வைத்தனர். அந்த வீடுகளில் வசித்தவர்களுக்கு உணவு பொட்டலம் வழங்கப்பட்டது.
கடந்த 1991–ம் ஆண்டு சாத்தான்குளத்தில் ஒரே நாளில் 26 சென்டி மீட்டர் மழை பெய்தது. அதன் பின்னர் தற்போதுதான் 22 செ.மீ. மழை பெய்ததாக அப்பகுதியினர் தெரிவித்தனர். இதேபோன்று குலசேகரன்பட்டினத்திலும் இரவு முழுவதும் விடிய விடிய பலத்த மழை பெய்தது.
உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கின
உடன்குடி, திருச்செந்தூர், மெஞ்ஞானபுரம், நாசரேத், தட்டார்மடம், ஆறுமுகநேரி, காயல்பட்டினம், ஆத்தூர், ஏரல், ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, ஆழ்வார்திருநகரி, குரும்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு முழுவதும் விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. ஆறுமுகநேரியில் பெய்த பலத்த மழையால் அங்குள்ள உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கின. ஆறுமுகநேரி வாரச்சந்தை வளாகத்தில் தண்ணீர் தேங்கியதால், மெயின் ரோட்டின் அருகில் வியாபாரிகள் கடைகளை அமைத்து பொருட்களை விற்பனை செய்தனர்.
கயத்தாறில் நேற்று அதிகாலையில் சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. பின்னர் மதியம் சுமார் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. கோவில்பட்டியில் காலையில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. எட்டயபுரத்தில் அதிகாலையில் மிதமான மழை பெய்தது. காலையில் பலத்த மழை சிறிதுநேரம் பெய்தது.