முதலியார்பேட்டையில் காண்டிராக்டருக்கு கத்தி குத்து 2 பேருக்கு வலைவீச்சு

முதலியார்பேட்டையில் பெயிண்டிங் காண்டிராக்டரை கத்தியால் குத்திய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update: 2018-11-02 23:31 GMT
புதுச்சேரி,

புதுவை முதலியார்பேட்டை சுதானாநகரைச் சேர்ந்தவர் சூரி(வயது 42). கட்டிடங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் பணியை ஆட்களை வைத்து செய்து வருகிறார். இவரிடம் தேங்காய்த்திட்டு பகுதியை சேர்ந்த வேலு, சுரேஷ் ஆகியோர் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் காலை சூரியை சந்தித்து வேலை ஏதாவது இருக்கிறதா? என்ற கேட்டுள்ளனர். அப்போது அவர் தற்போது மழை பெய்வதால் வேலை எதுவும் இல்லை என்று கூறி அவர்களை அனுப்பிவிட்டார். பின்னர் இருவரும் சூரியின் செல்போனில் தொடர்பு கொண்டு வேலையில்லை என கூறிவிட்டீர்கள், தீபாவளி நேரம் ஏதேனும் முன்பணமாவது தாருங்கள் என கேட்டுள்ளனர்.

அப்போது சூரி தற்போது தன்னிடம் பணம் இல்லை என்று கூறினார். உடனே அவர்கள் இருவரும் எங்கள் செல்போனுக்கு ‘ரீ சார்ஜ்’ செய்து கொடுங்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு சூரி சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் கூறிய பின்னர் பலமணி நேரங்கள் ஆகியும் அவர்களது செல்போனில் ‘ரீ சார்ஜ்’ ஆகவில்லை.

இதனால் அதிருப்தி அடைந்த வேலு, சுரேஷ் ஆகிய 2 பேரும் நேராக சூரியின் வீட்டிற்குச் சென்று அவரிடம் தகராறு செய்தனர். இதனை பார்த்த சூரியின் மகன் அவர்களை பார்த்து போலீசில் புகார் செய்வேன் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் 2 பேரும் தங்கள் இடுப்பில் வைத்திருந்த கத்தியை எடுத்து சூரியின் மகனை குத்த முயற்சி செய்தனர்.

இதனை பார்த்த உடன் சூரி தனது மகன் மீது கத்தி குத்து விழாமல் இருக்க அவர்களை தடுத்துள்ளார். அப்போது அவரது கழுத்தில் கத்தி குத்து விழுந்தது. உடனே அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதில் படுகாயம் அடைந்த சூரி சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலு, சுரேஷ் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்