கல்வியியல் கல்லூரியில் ஏழை மாணவி கட்டணமில்லாமல் படிக்க உதவிய கலெக்டர்
ஏழை மாணவிக்கு தனியார் கல்வியியல் கல்லூரியில் கட்டணமின்றி படிக்க கலெக்டர் நடவடிக்கை எடுத்தார். இதனையொட்டி மாணவியும் அவரது பெற்றோரும் கலெக்டருக்கு நன்றி தெரிவித்தனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை தலையாம்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் நந்தினி. இவர் திருவண்ணாமலையில் உள்ள அருணை கல்வியியல் கல்லூரியில் பி.எட். முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவி நந்தினி, கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியை நேரில் சந்தித்து, தனது குடும்பம் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளதாகவும், இதன் காரணமாக பி.எட். படிப்பதற்கான கட்டணம் செலுத்த இயலாமல் சிரமப்படுவதாகவும், கல்வி கட்டணம் செலுத்த உதவி செய்யுமாறும் கோரிக்கை வைத்தார்.
மாணவியின் குடும்ப ஏழ்மை குறித்து விசாரிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதில், மாணவி நந்தினி அரசுப் பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பயின்று முதல் மதிப்பெண் பெற்றதும், அவர், எம்.ஏ. ஆங்கிலம் முதுகலை பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றதும் அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
இவரின் தந்தை ஆரம்ப காலத்தில் சோடா வியாபாரம் செய்து வந்துள்ளார். தற்போது உடல்நலக்குறைவாலும், தொழிலுக்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்து விட்டதாலும் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே உள்ளார். இவரது மனைவி விவசாய கூலி வேலை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தினை பராமரித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் நந்தினி மேற்படி படிப்பிற்கு நிர்ணயம் செய்யப்பட்ட கல்வி கட்டணங்களை முழுமையாக செலுத்த இயலாத நிலையில் உள்ளது தெரியவந்தது.
இது குறித்து கலெக்டருக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.
ஏழ்மை நிலையில் மாணவி நந்தினி மனம் தளராமல் படிப்பதில் உறுதியாக இருந்ததை எண்ணி வியந்த கலெக்டர், உடனடியாக கல்லூரி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு அவருக்கு கட்டணமின்றி படிப்பினை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். அதன் அடிப்படையில் நந்தினி கட்டணமின்றி கல்வியியல் படிப்பினை நிறைவு செய்ய உதவி செய்திடக் கோரி பரிந்துரை கடிதத்தினை நேற்று முன்தினம் அருணை கல்வியில் கல்லூரி குழுமத் தலைவர் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் செயலாளர் கிருஷ்ணகுமாரி ஆகியோரை கலெக்டர் தனது முகாம் அலுவலகத்திற்கு வரவழைத்து நேரில் அளித்தார்.
இந்த பரிந்துரை கடிதத்தின் அடிப்படையில் மாணவி நந்தினி 2 ஆண்டுகள் செலுத்த வேண்டிய தேர்வு கட்டணம் உள்பட அனைத்து கட்டணங்களில் இருந்தும் முழுவதுமாக விலக்கு அளித்து படிக்க ஏற்பாடு செய்வதாக கலெக்டரிடம் கல்லூரி நிர்வாகத்தினர் உறுதி அளித்தனர். எவ்வித உதவியுமின்றி தவித்த தனக்கு கட்டணமின்றி படிக்க உதவிய கலெக்டர் மற்றும் கல்லூரி நிர்வாகத்திற்கு மாணவி நந்தினி மற்றும் அவரது பெற்றோர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.