ராமர் கோவில் விவகாரத்தில் மத்திய அரசை ஏன் கவிழ்க்க கூடாது? ஆர்.எஸ்.எஸ்.க்கு, உத்தவ் தாக்கரே கேள்வி

ராமர் கோவில் விவகாரத்தில் மத்திய அரசை ஏன் கவிழ்க்க கூடாது? என ஆர்.எஸ்.எஸ்.க்கு உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பி உள்ளார்.

Update: 2018-11-02 23:30 GMT
மும்பை,

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தின் உரிமை தொடர்பான வழக்கு நீண்ட காலமாக நடந்து வருகிறது. கடந்த 29-ம் தேதி இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அமர்வு, வழக்கு விசாரணையை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்தது. இந்த முடிவுக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

இந்தநிலையில் தானேயில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 3 நாள் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அதன் பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி செய்தியாளர்களை சந்தித்தபோது, “அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த நாங்கள் தயங்கமாட்டோம். ஆனால் நீதித்துறை மீது உள்ள நம்பிக்கை காரணமாக அவ்வாறு செய்யாமல் இருக்கிறோம்” என தெரிவித்தார்.

இந்தநிலையில் அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வரும் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே இது குறித்து நேற்று பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:-

ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி வந்த பா.ஜனதா, மோடி ஆட்சிக்கு வந்ததும் இந்த விவகாரத்தில் அமைதியாகிவிட்டது. தற்போது சிவசேனா இந்த பிரச்சினையை கையில் எடுத்ததும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் ராமர் கோவிலுக்காக போராட்டம் நடத்தும் முடிவுக்கு வந்துள்ளது.

வலுவான அரசை கையில் வைத்திருக்கும் நிலையிலும் போராட்டம் நடத்தவேண்டிய நிலையை நீங்கள் (ஆர்.எஸ்.எஸ்.) உணர்ந்தால், ஏன் இந்த அரசை கவிழ்க்க கூடாது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கடின உழைப்பின் காரணமாக தான் பா.ஜனதா அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்தது. ஆனால் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது உள்பட ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அத்தனை கொள்கை முடிவுகளையும் அக்கட்சி புறக்கணித்துவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக வரும் 25-ந் தேதி தான் அயோத்தி செல்ல திட்டமிட்ட பின்னரே மற்றவர்களும் இது குறித்து பேச தொடங்கி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்