தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரெயிலில் அடிபட்டு பலி மற்றொரு சம்பவத்தில் ஓடும் ரெயிலில் தவறி விழுந்தவர் சாவு
ஜோலார்பேட்டை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரெயிலில் அடிபட்டு பலியானார். மற்றொரு சம்பவத்தில் ஓடும் ரெயிலில் தவறி விழுந்தவர் பரிதாபமாக இறந்தார்.
ஜோலார்பேட்டை,
காட்பாடி-ஜோலார்பேட்டை இடையே அதிக அளவிலான சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் செல்கின்றன. இவற்றில் பல ரெயில்கள் காட்பாடியை அடுத்து ஜோலார்பேட்டையில்தான் நிற்கும். இடைப்பட்ட தூரங்களில் அந்த ரெயில்கள் மின்னல்வேகத்தில் செல்லும். இதனால் ரெயில் படிக்கட்டுகளில் பயணம் செய்பவர்கள் தவறி விழுந்து இறப்பதும், தண்டவாளத்தை கடப்பவர்கள் ரெயிலில் அடிபட்டு இறப்பதும் தொடர்கதையாகி வருகிறது. வாரத்திற்கு 3 பேராவது இதுபோன்ற விபத்துகளில் இறக்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை ஆம்பூர் அழகாபுரத்தை சேர்ந்த சுப்பிரமணி மகன் ராபர்ட் (வயது 40) ஆம்பூர் ரெயில் நிலையத்தில் யார்டு அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது காட்பாடி பகுதியிலிருந்து ஜோலார்பேட்டையை நோக்கி அதிவேகமாக சென்ற ரெயிலின் என்ஜினில் அவர் சிக்கினார். 50 அடி தூரம் இழுத்துச்செல்லப்பட்ட அவர் தூக்கி வீசப்பட்டதில் உடல் 2 துண்டாகி அந்த இடத்திலேயே இறந்தார்.
காட்பாடி-ஜோலார்பேட்டை இடையே சென்ற ரெயிலில் படிக்கட்டின் அருகே நின்றவாறு 45 வயதுடைய ஆண் பயணம் செய்தார். ரெயில் குடியாத்தம் ரெயில் நிலைய பகுதியில் மெதுவாக சென்றபோது ரெயிலில் இருந்து கீழே தவறி விழுந்தார். ஆபத்தான நிலையில் இருந்த அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அவர் அனுப்பப்பட்டார்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இறந்த அந்த நபர் மாநிறமுடையவர். கருப்பு நிற டிரவுசர் அணிந்திருந்தார். அவரது உடல் தற்போது வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. 2 விபத்துகள் குறித்தும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.