தீபாவளி பண்டிகை கூட்ட நெரிசல்: திண்டுக்கல்லில் பாதுகாப்புக்கு 300 போலீசார் நியமனம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல்லில் பாதுகாப்புக்கு 300 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

Update: 2018-11-02 21:45 GMT
திண்டுக்கல், 

தீபாவளி பண்டிகை வருகிற 6-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திண்டுக்கல்லில் ஜவுளிக்கடைகள், வீட்டு உபயோக பொருள் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோத தொடங்கி உள்ளது. மேலும் மெயின்ரோடு, ஆர்.எஸ்.சாலை, ஏ.எம்.சி. சாலை ஆகியவற்றில் சாலையோர கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த சாலையோர கடைகளில் விதவிதமான ஆடைகள், பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் சாலையோர கடைகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. எனவே, திண்டுக்கல் மெயின்ரோட்டில் இன்று (சனிக்கிழமை) முதல் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுகிறது.

இதற்கிடையே தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை பறிப்பு, திருட்டு என திருடர்கள் கைவரிசையை காண்பித்து விடும் வாய்ப்பு உள்ளது. இதை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீ சார் என 15 பேரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படை போலீசார் நெரிசல் மிகுந்த பகுதிகளில் சாதாரண உடைகளில் கண்காணித்து வருகின்றனர். இதுதவிர வாகன போக்குவரத்தை சரிசெய்யவும், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க பாதுகாப்புக்கு என திண்டுக்கல் நகருக்கு மட்டும் மொத்தம் 300 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள், திண்டுக்கல் நகர் போலீஸ் துணை சூப்பிரண்டு மணிமாறன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

மேலும் மெயின்ரோடு, கடைவீதி, ஏ.எம்.சி.சாலை, ஆர்.எஸ்.சாலை உள்ளிட்ட பகுதிகளில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அதேபோல் மெயின்ரோட்டில் 2 இடங்களில் தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. அதில் இருந்தபடி தொலைநோக்கி மூலம் கண்காணிப்பு பணியை மேற்கொள்ளவும் போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்