காமநாயக்கன்பாளையத்தில் பூட்டிய வீட்டிற்குள் இருந்த பேரலில் அழுகிய நிலையில் பெண் பிணம்- கொலை செய்து மறைத்து வைத்த ஆசாமியை போலீசார் தேடுகின்றனர்

காமநாயக்கன்பாளையம் பகுதியில் பூட்டிய வீட்டிற்குள் இருந்த பேரலில் அழுகிய நிலையில் பெண் பிணம் இருந்துள்ளது. அந்த பெண்ணை கொலை செய்து பேரலுக்குள் வைத்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update:2018-11-03 04:00 IST
காமநாயக்கன்பாளையம்,

பல்லடத்தை அடுத்த காமநாயக்கன்பாளையம் அருகே உள்ள இலவந்தி ஊராட்சி கிரிச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 58). விவசாயி. இவருக்கு கிரிச்சிபாளையத்தில் சொந்தமாக வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டில் அந்த பகுதியில் உள்ள நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த செந்தில் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வந்தார். இவருடன் ஒரு இளம்பெண்ணும் அந்த வீட்டில் குடியிருந்ததாக தெரிகிறது. ஒருசில மாதங்கள் அவர்கள் இருவரும் அங்கு குடியிருந்து வந்தனர். ஆனால், கடந்த சில வாரங்களாக அந்த வீடு பூட்டிய நிலையிலேயே இருந்துள்ளது. அவ்வப்போது செந்தில் மட்டும் அங்கு வந்து சென்றுள்ளார். வீடு பூட்டிய நிலையிலேயே இருப்பதால் அந்த பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் தனக்கு இந்த வீட்டை வாடகைக்கு தரும்படி அதன் உரிமையாளர் ராமசாமியிடம் கேட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் அந்த வீட்டை பிரகாசுக்கு வாடகைக்கு விடுவதற்கு ஒப்பு கொண்டுள்ளார். மேலும், அந்த வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து ஒரு அறையில் வைத்து விட்டு, நீங்கள் வீட்டை வாடகைக்கு எடுத்து கொள்ளுங்கள் என்றும் பிரகாஷிடம் அவர் கூறியுள்ளார். இதையடுத்து வீட்டில் உள்ள பொருட்களை அங்குள்ள ஒரு அறையில் பிரகாஷ் எடுத்து வைத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பேரலை தூக்கி அறையில் கொண்டு வைக்க முயன்றார்.

ஆனால் அந்த பேரலை அவரால் நகர்த்த முடியவில்லை. பேரலின் வாய்ப்பகுதி அட்டை வைத்து இறுக்கமாக கட்டி அடைக்கப்பட்டிருந்தது. இதில் தண்ணீர் இருக்கலாம் என்று எண்ணிய அவர் அந்த பேரலின் வாய்பகுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அட்டையை திறந்து பார்த்துள்ளார். அப்போது அந்த பேரலில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. பேரலின் உள்ளே பார்த்த போது பெண் ஒருவரின் பிணம் இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கூச்ச லிட்டபடியே, வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார். பின்னர் இதுகுறித்து உடனடியாக வீட்டின் உரிமையாளருக் கும், காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தார்.

தகவலின்படி அங்கு விரைந்து வந்த போலீசார் அந்த பேரலில் இருந்த பெண்ணின் பிணத்தை வெளியே எடுத்து பார்த்தனர். அழுகிய நிலையில் இருந்த அந்த பெண் சுமார் 35 வயது மதிக்கத்தக்கவராக இருந்தார். உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்டு பேரலுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெண் அந்த வீட்டில் செந்தில் என்பவருடன் தங்கி இருந்தவரா? அல்லது வேறு எந்த பெண்ணையாவது கடத்தி வந்து கொலை செய்து அங்கு வைக்கப்பட்டதா? இறந்த பெண்ணின் பெயர் என்ன? எந்த ஊர்? அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இந்த வழக்கு விசாரணைக்காக அந்த வீட்டில் தங்கி இருந்த செந்தில் என்பவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்