ரூ.8¾ லட்சம் முறைகேடு: சேலம் மத்திய சிறை ஊழியர் பணி இடைநீக்கம்
ரூ.8¾ லட்சம் முறைகேடு தொடர்பாக சேலம் மத்திய சிறை ஊழியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
சேலம்,
சேலம் மத்திய சிறையில் சுமார் 800-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அவர்களின் உறவினர்கள் கொடுக்கும் பணம் கைதியின் கணக்கில் வரவு வைக்கப்படும். இதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. மேலும் கேன்டீனுக்கு உணவு பொருட்கள் வாங்கியதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட காசோலை வங்கியில் பணம் இல்லாததால் திரும்பி வந்தது. இதனால் சிறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்த சிறைத்துறை ஐ.ஜி.க்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதன்பேரில் தணிக்கை அதிகாரிகள் சேலம் மத்திய சிறைக்கு வந்து ஆய்வு நடத்தினர். அப்போது கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை ரூ.8 லட்சத்து 77 ஆயிரத்து 731 முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து சேலம் மத்திய சிறையில் முதுநிலை உதவியாளராகவும், கேன்டீன் பொறுப்பாளராகவும் இருந்த வெற்றிவேல் மீது சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் அவர் கடந்த சில நாட்களாக பணிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் வெற்றிவேலை பணி இடைநீக்கம் செய்து சிறை கூடுதல் கண்காணிப்பாளர் சங்கர் உத்தரவிட்டார். மேலும் இந்த முறைகேட்டில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.