தஞ்சாவூர்,
தஞ்சை பூக்காரத்தெருவில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு 60 கடைகள் உள்ளன. பூச்சந்தைக்கு ஸ்ரீரங்கம், நிலக்கோட்டை, திண்டுக்கல், ஓசூர் மற்றும் தஞ்சையை சுற்றியுள்ள பல கிராமங்களில் இருந்து பூக்கள் கொண்டு வரப்படுகின்றன. பூக்களின் விலையில் அடிக்கடி ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. தமிழகத்தில் தற்போது பல்வேறு இடங்களில் பெய்த மழையினால் பூக்கள் உற்பத்தியும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் தஞ்சை பூ மார்க்கெட்டிற்கு பூக்கள் வரத்து குறைந்துள்ளது. கல்லறை திருநாள் நிகழ்ச்சி நேற்று கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்பட்டது. பல்வேறு வகையான பூக்களை வாங்கி சென்று கல்லறையில் வைத்து தனது முன்னோர்களை நினைத்து வழிபட்டனர். தஞ்சையில் நேற்று பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது.
மல்லிகைப்பூ கிலோ ரூ.300-க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும் நேற்று முன்தினம் விற்பனை செய்யப்பட்டது. நேற்று விலை உயர்ந்து மல்லிகைப்பூ ரூ.400-க்கும், கனகாம்பரம் ரூ.1,000-க்கும் விற்பனையானது. ரூ.60-க்கு விற்ற செவ்வந்தி ரூ.100-க்கும், ரூ.150-க்கு விற்ற அரளிப்பூ ரூ.200-க்கும், ரூ.200-க்கு விற்பனையான ஜாதிமல்லி ரூ.400-க்கும், ரூ.100-க்கு விற்பனையான ரோஜா ரூ.200-க்கும் விற்கப்பட்டது.
மேலும் செட்டிப்பூ, மருக்கொழுந்து விலையும் அதிகரித்து இருந்தது. பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டாலும் பூக்களை வாங்கி செல்ல மக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இது குறித்து பூ வியாபாரி சந்திரசேகரன் கூறுகையில், கல்லறை திருநாள் நிகழ்ச்சி என்பதால் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி தீபாவளி பண்டிகைக்காக சீர்வரிசை செய்வது உண்டு. இதன் காரணமாகவும் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. பூக்களின் வரத்து குறைவாக தான் இருக்கிறது. மக்கள் ஆர்வத்துடன் பூக்களை வாங்கி சென்றனர் என்றார்.