தஞ்சையில், கல்லறை திருநாள் நிகழ்ச்சி மழையில் நனைந்தபடி ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
தஞ்சையில் நடைபெற்ற கல்லறை திருநாள் நிகழ்ச்சியில் மழையில் நனைந்தபடி ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்,
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் ஆண்டு தோறும் நவம்பர் மாதம் 2-ந்தேதி கல்லறை திருநாளாகவும், ஆத்மாக்களின் திருநாளாகவும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி தஞ்சையில் உள்ள அனைத்து கல்லறை தோட்டங்களிலும் நடைபெற்றது. இந்த திருநாளையொட்டி கல்லறைகளுக்கு வர்ணம் பூசப்பட்டு இருந்தது.
தஞ்சை தூயபேதுரு ஆலய கல்லறை தோட்டத்தில் நடைபெற்ற கல்லறை திருநாளில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் இறந்த தங்கள்முன்னோர்கள் சமாதி முன்பு கொட்டும் மழையில் மலர்களை தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை படைத்து வழிபட்டனர். அப்போது சிலர் சமாதி முன்பு கண்ணீர் விட்டு அழுதனர்.
இதே போல் தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை பூக்காரத்தெருவில் உள்ள புனித சூசையப்பர் கல்லறை தோட்டத்திலும் ஏராளமான கிறிஸ்தவர்கள் இறந்த தங்களது மூதாதையர்களின் சமாதி முன்பு மலர்தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தும் வழிபட்டனர்.
தஞ்சையை அடுத்த திருக்கானூர்பட்டியில் 2 இடங்களில் கல்லறை தோட்டம் உள்ளது. இந்த 2 கல்லறை தோட்டத்திலும் கிறிஸ்தவர்கள் தங்கள் மூதாதையர்களின் சமாதி முன்பு மலர்களை தூவி வழிபட்டனர். பின்னர் திருக்கானூர்பட்டியில் உள்ள 2 கல்லறை தோட்டத்திலும் பங்குத்தந்தைகள் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.
கல்லறை திருநாள் குறித்து சமாதியில் வழிபட வந்தவர்கள் கூறும் போது, “எங்கள் மூதாதையர்களின் நினைவை போற்றும் விதமாகவும், அவர்கள் எங்களுக்கு கற்று தந்த வாழ்வியல்களை கடைபிடிக்கும் விதமாகவும் ஆங்காங்கே உள்ள கல்லறை தோட்டங்களுக்கு வந்து வழிபடுகிறோம். மேலும் எங்கள் மூதாதையர்களுக்கு பிடித்தவற்றை அவர்கள் சமாதியில் வைத்து வேண்டிக்கொள்கிறோம். ஒவ்வொருவரும் இந்த குறுகிய வாழ்வில் செய்ய வேண்டிய நன்மைகளை எடுத்து சொல்வதற்காகவும், அனைவருக்கும் இறைவன் நியாய தீர்ப்பு வழங்குவான் என்ற உண்மையை புரிய வைப்பதற்காகவும் இந்த நிகழ்ச்சி அனுசரிக்கப்படுகிறது”என்றனர்.
தஞ்சை மாவட்டம் பூண்டியில் பிரசித்தி பெற்ற மாதா பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்தில் கல்லறை திருநாள் சிறப்பு திருப்பலி பேராலய அதிபர் பாக்கியசாமி தலைமையில் நடைபெற்றது. திருப்பலியில் துணை அதிபர் அல்போன்ஸ், தியானமைய இயக்குனர் குழந்தை சாமி, உதவி பங்கு தந்தைகள் கலந்து கொண்டனர். முன்னதாக பேராலயத்தின் உள்ளே உள்ள மறைந்த அருட்தந்தை லூர்துசேவியர் கல்லறை , கல்லறை தோட்டத்தில் உள்ள அருட்தந்தை ராயப்பர் ஆகியோரின் கல்லறைகள் அவர்களை நினைவாக மந்திரிக்கப்பட்டன. இதைப்போல பூண்டி அருகே உள்ள மைக்கேல்பட்டி, மணத்திடல், முத்தாண்டிபட்டி, கோட்டரப்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள கல்லறைகளும் தூய்மைப்படுத்தப்பட்டு மாலைகள் அணிவித்து உறவினர்கள் வணங்கி சென்றனர்.