புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் தெப்பக்குளத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் பணி தொடங்கியது

புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் தெப்பக்குளத்தில் மீன்கள் செத்து மிதந்ததை தொடர்ந்து குளத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் பணி தொடங்கியது.

Update: 2018-11-02 22:45 GMT
தஞ்சாவூர்,
தஞ்சை அருகே உள்ள புன்னைநல்லூரில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. தஞ்சை அரண்மனை தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த கோவில் அருகே தெப்பக்குளம் உள்ளது. தெப்பத்திருவிழா, முத்துப்பல்லக்குவிழா போன்ற கோவில் நிகழ்ச்சிகள் இந்த குளத்தில் வெகு விமரிசையாக நடைபெறும்.

மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த குளத்தில் புனித நீராடுவதும் வழக்கம். கோவிலுக்கு முடிகாணிக்கை செலுத்தும் பக்தர்களும் இந்த குளத்தில் நீராடிச்செல்கின்றனர். கடந்த மாதம் 21-ந் தேதி கோவில் தெப்பக்குளத்தில் இருந்த மீன்கள் திடீரென செத்து மிதந்தன. இதைக்கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து செத்து மிதந்த மீன்கள் அப்புறப்படுத்தப்பட்டன.

முறையாக குளத்தை பராமரிப்பு செய்யாததால்தான் அதில் இருந்த மீன்கள் செத்து மிதந்ததாக கூறப்பட்டது. மேலும் குளத்தில் உள்ள மீன்களை கொல்ல வேண்டும் என்பதற்காக மர்ம நபர்கள் விஷம் ஏதும் கலந்தனரா? என்ற கோணத்திலும் தஞ்சை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் குளத்தில் இருக்கும் தண்ணீரை வெளியேற்றும் பணி தொடங்கியது. தஞ்சை மாரியம்மன் கோவில் விழாக்கமிட்டி மற்றும் சிங்கவளநாடு பகுதி மக்கள் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்காக மின்மோட்டார்கள் கொண்டு குளத்தில் இருந்து நீர் இறைக்கப்பட்டு அருகில் உள்ள தாமரை குளத்தில் குழாய்கள் மூலம் தண்ணீர் விடப்படுகிறது. தாமரை குளத்தில் விடப்படும் தண்ணீர் வாய்க்கால் வழியாக வடவாற்றுக்கு செல்லும்படி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் வெளியேற்றும் பணி 2 நாட்களுக்கு நடைபெறும் என பணியாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்