விவசாயி கொலை வழக்கில்: தம்பதி உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை - சிதம்பரம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

விவசாயி கொலை வழக்கில் தம்பதி உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிதம்பரம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

Update: 2018-11-02 21:45 GMT
சிதம்பரம், 

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது செட்டிகட்டளை ஊராட்சி. கடந்த 2011-ம் ஆண்டு நடந்த ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு லட்சுமி குடியை சேர்ந்த மனித உரிமை கட்சியின் தலைவர் விஸ்வநாதன் மனைவி கலைவாணி, கொத்தவாசல் கிராமம் நாகராஜன் மனைவி சுமதி ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தல் பணியில் சுமதிக்கு ஆதரவாக லட்சுமிகுடி கிராமத்தை சேர்ந்த விவசாயி புதுராஜன்(வயது 55) செயல்பட்டுள்ளார். தேர்தல் முடிவில், கலைவாணி வெற்றி பெற்று, ஊராட்சி மன்ற தலைவியாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து தேர்தலில் சுமதிக்கு ஆதரவாக செயல்பட்ட புதுராஜனிடம், கலைவாணியின் ஆதரவாளர்கள் தகராறு செய்தனர். இது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் 27-ந்தேதி தனது வீட்டில் புதுராஜன் இருந்தார். அப்போது விஸ்வநாதன்(45), கலைவாணி, லட்சுமிகுடி கிராமத்தை சேர்ந்த ஊசி என்கிற சவுந்தரராஜன்(44), கலியன் மகன் அறிவழகன்(42), மகாலிங்கம் மகன் கார்த்திக் என்கிற கார்த்திகேயன்(34), அன்பழகன்(38), ராமசாமி(53), பழனிவேல் மகன் அறிவழகன், செட்டி கட்டளை ஜெயராமன் மகன் கங்கைஅமரன்(30) ஆகியோர் அங்கு வந்து, புதுராஜனை திட்டி தாக்கினர். இதில் வீட்டில் இருந்து தப்பி ஓடிய அவரை, அந்த கும்பல் துரத்தி சென்று அதே பகுதியில் உள்ள குளக்கரையில் வைத்து கத்தியால் வெட்டிக் கொலை செய்தது.

இதுகுறித்து புதுராஜனின் மகன் ரமேஷ்(38) புத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஸ்வநாதன், கலைவாணி உள்பட 9 பேரையும் கைது செய்தனர். மேலும் இது தொடர்பான வழக்கு விசாரணை சிதம்பரத்தில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி சண்முகசுந்தரம் நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தார். அதில் குற்றம் சுமத்தப்பட்ட சவுந்தரராஜன், விஸ்வநாதன், கலைவாணி, கலியன் மகன் அறிவழகன், கார்த்திக் என்கிற கார்த்திகேயன், அன்பழகன், ராமசாமி, கங்கைஅமரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சண்முகம் சுந்தரம் தீர்ப்பு அளித்தார். இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பழனிவேல் மகன் அறிவழகன் என்பவர் வழக்கு விசாரணையின் போதே இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதில் அரசு வக்கீல் ஞானசேகரன் ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்