வத்தலக்குண்டு பகுதிக்கு தண்ணீர் கேட்டு : கருப்பு கொடி ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
வத்தலக்குண்டு பகுதிக்கு தண்ணீர் கேட்டு விவசாயிகள், கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வத்தலக்குண்டு,
வத்தலக்குண்டு பகுதியில் உள்ள 5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயனடையும் வகையில் மஞ்சளாறு அணை கட்டப்பட்டது. பின்னர் அணையின் தண்ணீர் தேனி மாவட்டத்தின் சில பகுதிகளுக்கும் பிரித்து விடப்பட்டது. இந்தநிலையில் கடந்த மாதம் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மஞ்சளாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவிட்டார். ஆனால் இதுவரை வத்தலக் குண்டு பகுதியில் உள்ள எந்த கண்மாய்க்கும் தண்ணீர் வரவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் 500-க்கும் மேற்பட்டோர் தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் இளங்கோவன் தலைமையில் நேற்று வத்தலக்குண்டுவில் திரண்டனர். அப்போது வத்தலக் குண்டு பகுதிக்கு தண்ணீர் விரைவில் வந்தடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அவர்கள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் விவசாயிகள் கிராம கமிட்டி தலைவர் முருகப்பா, சவுந்தரராஜன் உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மஞ்சளாறு அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாகவும், இன்னும் 2 நாட்களில் தண்ணீர் வந்துவிடுவதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாகவும், எனவே போராட்டத்தை கைவிடுமாறும் போலீசார் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
இதுபற்றி தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் கூறுகையில், ‘57 அடி உயரம் கொண்ட மஞ்சளாறு அணையில் தற்போது 55 அடி தண்ணீர் உள்ளது. ஆனால் வத்தலக்குண்டு பகுதி விவசாயிகள் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி விவசாயம் செய்கின்றனர். எனவே வத்தலக்குண்டு பகுதிக்கு விரைவில் தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்டமாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என்றார்.