தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உணவுபொருட்களை சுகாதாரமான முறையில் தயாரிக்க வேண்டும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உணவு பொருட்களை சுகாதாரமான முறையில் தயாரிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி,
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உணவு பொருட்களை சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவு பொருட்களை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான நிறத்தையோ உபயோகிக்க கூடாது.
பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு, விவரச்சீட்டு இடும்போது அதில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருளின் பெயர், தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட்ட தேதி, சிறந்த பயன்பாட்டு காலம் (காலாவதியாகும் காலம்), சைவ மற்றும் அசைவ குறியீடு ஆகியவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும். உணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் பொதுமக்களுக்கு விற்பனை செய்திட வேண்டும்.
பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உடனடியாக உணவு பாதுகாப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் கீழ் தங்களது வணிகத்தினை பதிவு செய்து உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும்.
பொதுமக்களும், பண்டிகை காலங்களில் பலகாரங்கள் வாங்கும் போதும் உணவு பாதுகாப்புத்துறையில் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டும் வாங்குமாறும், பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை விவரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி உபயோகிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், இது தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின் கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் நியமன அலுவலரிடம் தெரிவிக்கலாம். பொதுமக்கள் உணவு பொருள் சம்பந்தமாக புகார் தெரிவிக்க உணவு பாதுகாப்பு துறையின் 94440 42322 என்ற வாட்ஸ்-அப் எண்ணிலும் கலெக்டர் அலுவலக புகார் எண் 04343 - 234444 மற்றும் 1077 என்ற எண்ணிற்கு தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.